தென்காசி மாவட்டத்தில் நடந்த 73-வது குடியரசு தின விழா.

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 49 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கங்களையும், வருவாய்த்துறை மற்றும் பிறத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 82 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். விளையாட்டுத் துறையில் ஆசிய அளவில் நடைபெற்ற வலுதூக்கும் விளையாட்டு போட்டியில், வெண்கல பதக்கம் வென்ற சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜாவுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நற்சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும், சிறப்பாக செயல்பட்ட மீரான் தனியார் மருத்துவமனைக்கும், காவல் துறையில் சிறப்பாக செயலாற்றிய 26 காவலர்களுக்கும், வருவாய்த்துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் 1 குறுவட்ட வருவாய் ஆய்வாளருக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் சிறப்பாக பணியாற்றிய 1 வட்டார வளர்ச்சி அலுவலர், 1 துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 3 தூய்மை காவலர் மற்றும் 3 ஊக்குவிப்பாளருக்கும், இணை இயக்குநர் நலப்பணிகள் துறையில் சிறப்பாக பணியாற்றிய 3 மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்களுக்கும், துணை இயக்குநர் நலப்பணிகள் துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 மருத்துவ அலுவலர் மற்றும் 1 வட்டார மேற்பார்வையாளருக்கும், மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 வட்டார மருத்துவ அலுவலருக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 உதவி மருத்துவ அலுவலர், 1 சிகிச்சை உதவியாளர், 1 மருத்துவமனை பணியாளர், அவசர ஊர்தியில் சிறப்பாக பணியாற்றிய 6 அலுவலர்களுக்கும், உதவி இயக்குநர் பேரூராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய 5 செயல் அலுவலர், 1 சுகாதார அலுவலர், வேளாண்மைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 உதவி விதை அலுவலர், 7 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கும், தோட்டக்கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 4 உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கும், நகராட்சி நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய 1 வருவாய் உதவியாளர் மற்றும் 5 தூய்மைப் பணியாளர்களுக்கும், பொதுப் பணித்துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 உதவி பொறியாளர் என மொத்தம் 82 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சு.தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தி.உதய கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பா.குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்