குடிபோதையில் தகராறு செய்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி தெற்குவளவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் ஆக உள்ள நிலையில், தனது மனைவி ஷீலா, மகள் விஜயதர்ஷினி, மகன் விஜயராமன் ஆகியோருடன் மேலூர் அருகே எம்.மலம்பட்டியில் தனியாக சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றார்.இந்நிலையில் மணிகண்டன் அடிக்கடி குடிபோதையில் வந்து மனைவி ஷீலாவுடன் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் மணிகண்டன் இன்று, இறைச்சி வாங்கிக்கொண்டு மனைவி ஷீலாவிடம் கொடுத்து சமைக்க சொல்லியுள்ளார். இதனிடையே குடிபோதையில் இருந்த மணிகண்டன் ஷீலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஷீலா வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து மணிகண்டன் தலையில் போட்டுள்ளார், இதில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தலை முற்றிலும் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து சீலா வீட்டைப் பூட்டிவிட்டு இதுகுறித்து மேலூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்து மேலூர் காவல்துறை சார்பு ஆய்வாளர் சார்லஸ் தலைமையில், காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் கமலமுத்து, ஜெயக்குமார், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருந்த வீட்டின் கதவை உடைத்து மணிகண்டன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் தடவியல் நிபுணர்கள் கொலை குறித்த தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறும்போது…மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர்.குடும்பத்தகராறு காரணமாக கட்டிய மனைவியை கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்