திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தலைவர்களின் புகைப்பட கண்காட்சி..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தலைவர்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அருங்காட்சியகம், திருநெல்வேலி பொருநை ரோட்டரி கழகம், இன்னர்வீல் கழகம் இணைந்து நடத்திய தேசியத் தலைவர்களின் புகைப்படக் கண்காட்சி திறப்பு மற்றும் மாணவ மாணவிகளுக்காக பல்வேறு போட்டிகள் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நெ‌ல்லை அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமையில் பாளையங்கோட்டை பிஷப் டாக்டர் அந்தோனிசாமி புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். தூய யோவான் கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்கென்னடி, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி, பொருநை ரோட்டரி கழகத் தலைவர் சுவர்ணலதா, இன்னர்வீல் தலைவர் கோமதிமாரியப்பன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் உமாலட்சுமி மற்றும் முருகன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். நீட் பவுண்டேசன் டிரஸ்ட் நிறுவன அறங்காவலர் அகிலாண்டம் முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக கல்லூரி,பள்ளி மாணவ மாணவிகளுக்காக கோலப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா,செயலாளர் கவிஞர் பாப்பாக்குடி அ.முருகன்,கவிஞர் ந.சுப்பையா, கலையாசிரியர் சொர்ணம் ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தினர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 29.10.2021 இன்று மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்