Home செய்திகள்உலக செய்திகள் முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் நினைவு தினம் இன்று (ஜூன் 23, 1891).

முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் நினைவு தினம் இன்று (ஜூன் 23, 1891).

by mohan

வில்கெம் எடுவர்டு வெபர் (Wilhelm Eduard Weber) அக்டோபர் 24, 1804ல் ஜெர்மனியின் விட்டென்பர்கில் இறையியல் பேராசிரியர் மைக்கேல் வெபருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று மக்களில் இரண்டாவதான வெபர், தனது மற்ற உடன்பிறப்புகளைப் போலவே அறிவியலில் நாட்டம் கொண்டார். விட்டென்பர்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டதையொட்டி இவரது தந்தையாருக்கு 1815ல் ஹால் என்ற நகருக்கு மாற்றலாயிற்று. அங்கு முதலில் தந்தையிடமும் பின்னர் அனாதை இல்லம் மற்றும் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் பல்கலைகழகத்தில் இணைந்து இயற்பியலில் ஆழ்ந்தார். தமது வகுப்புகளில் சிறந்து விளங்கிய வெபருக்கு முனைவர் பட்டத்துடன் பேராசிரியராகப் பணியும் அதே பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. 1831ல், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் பரிந்துரையில், தமது 27வது அகவையிலேயே கொட்டிஞ்சென் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிக்கமர்த்தப்பட்டார். தமது மாணவர்களை தாம் விளக்கும் பாடங்களையும் சோதனைகளையும் கல்லூரி ஆய்வகத்தில் கட்டணமேதுமின்றி அவர்களே சோதனைகளை மேற்கொள்ள ஊக்குவித்தார்.

தமது இருபதாவது அகவையிலேயே தம் உடன்பிறப்பான எர்னஸ்ட் வெபருடன் இணைந்து அலைக் கோட்பாடும் பாய்மத்தன்மையும் என்ற நூலை எழுதினார். இது மிகவும் புகழ்பெற்றது. ஒலியியல் இவருக்கு மிகவும் விருப்பமான அறிவியல்துறையாக இருந்தது. இத்துறையில் பல நூல்களை எழுதினார். தமது தம்பி எடுவர்டு வெபருடன் இணைந்து மனிதர்கள் நடப்பதின் இயக்கவியல் என்ற நூலை எழுதினார். இந்த நூல்கள் 1825க்கும் 1838க்கும் இடையே எழுதப்பட்டன. 1833ல் வெபரும் காஸும் இணைந்து முதல் மின்காந்த தந்தியை தங்கள் ஆய்வகத்திலிருந்து கொட்டிஞ்சென் இயற்பியல் கழகம் வரை நிறுவினர். டிசம்பர் 1837ல் அரசியல் காரணங்களுக்காக அனோவர் அரசு வெபரை பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்தது. சிலகாலம் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளுக்குச் சென்றிருந்த வெபர் லைப்சிக்கில் இயற்பியல் பேராசிரியராக 1843 முதல் 1849 வரை பணிபுரிந்தார். 1849ல் கொட்டிஞ்சென் மீண்டும் இவரை பணிக்கமர்த்தியது.

கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் மற்றும் கார்ல் பெஞ்சமின் கோல்ட்ஸ்மிட்டுடன் இவர் எழுதிய புவியின் காந்தப்புலத்தின் நிலப்படத் தொகுப்பு கோட்பாடுகளின் படி வடிவமைக்கப்பட்டது மிகவும் முக்கிய ஆக்கமாகும். இவரது முயற்சியாலேயே காந்த ஆய்வகங்கள் நிறுவப்பட்டன. காஸுடன் இணைந்து காந்தவியலில் ஆய்வுகள் மேற்கொண்டார். 1864ல் மின்னியக்க விகிதசம அளவைகள் என்ற நூலில் மின்னோட்டத்தை அளப்பதற்கான நெறிமுறைகளை விவரித்திருந்தார். 1855ல் அரச சுவீடிய அறிவியல் கழக வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1856ல் ருடோல்ஃப் கோல்ரோச்சுடன் இணைந்து நிலை மின்னியலுக்கும் மின்காந்தவிசைக்கும் இடையேயான விகிதம் அப்போது கண்டறிந்திருந்த ஒளியின் வேகத்திற்கு இணையான எண்ணாக அமைந்திருந்ததை நிரூபித்தார். இந்த நிரூபணமே பின்னர் ஒளியும் மின்காந்த அலைகளே என்ற மக்சுவல்லின் உய்த்துணர்விற்கு காரணமாயிற்று. மேலும் இது மின்னியக்கவியலுக்கும் வித்திட்டது. மேலும் 1856இல் வெபரும் கோல்ரோச்சும் தங்கள் ஆயவுக்கட்டுரை ஒன்றில் முதன்முதலாக ஒளியின் வேகத்திற்கு “c” என்ற குறியீட்டைப் பயன்படுத்தினர்.

கார்ல் காசுடன் இணைந்து முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த வில்கெம் எடுவர்டு வெபர் ஜூன் 23, 1891ல் தனது 86வது அகவையில் கொட்டிஞ்செனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். காந்தப்பாயத்திற்கான அனைத்துலக அலகு வெபர் (Wb) இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வெபர் கொட்டிஞ்செனில் மரணமடைந்த போது மேக்ஸ் பிளாங்க், மாக்ஸ் போர்ன் புதையுண்டிருந்த அதே கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!