பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்..

பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் இ. ஆ. ப. செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண்: 364 நாள்: 03. 05. 2021 ல் தெரிவித்துள்ளபடி, ஏற்கனவே அறிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் 01. 05. 2021 முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமுல்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கான தடை மற்றும் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது. நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் நோய் தொற்று நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் 06. 05. 2021 காலை 4 மணி முதல் 20. 05. 2021 காலை 4 மணி வரை மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க வேண்டும். பயணியர் இரயில், மெட்ரோ இரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க வேண்டும்.

வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12. 00 மணி வரை மட்டும் இயங்க வேண்டும். இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறும் கடைகள் மீது விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. இதனை மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும். உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்பட அனுதி இல்லை. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், இயங்க அனுமதி இல்லை. அத்தியாவாசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம் மருந்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருந்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் நிறுவனங்கள் இரவு நேர பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம் ஃ திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். நிபந்தனையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே ஆணையிட்டவாறு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6. 00 மணி முதல் மதியம் 12. 00 வரை மட்டும் செயல்பட வேண்டும். இதனை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொது மக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் இ. ஆ. ப. ,தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..