முகக்கவசம் (மாஸ்க்) அணியாதவர்களுக்கு பொருட்கள் இல்லை; தென்காசி ஆட்சியரின் அதிரடி உத்தரவு..

முகக்கவசம் (மாஸ்க்) அணியாதவர்களுக்கு கடைகளில் பொருட்கள் வழங்கப்படமாட்டாது எனவும்,இது குறித்து கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்திலோ அல்லது அரசு மருத்துவமனையிலோ தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு அரசுடன் இணைந்து கொரோனா நோய் பரவுதலை தடுத்திட முன்வர வேண்டும். மேலும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும். சாலைகளிலும், தெருக்களிலும் எச்சில் துப்பக்கூடாது. அவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளிவர வேண்டும். வெளியிலும், வீட்டிலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து நடமாட வேண்டும். கூடுமான வரை பொதுமக்கள் வெளியில் அலைவதை குறைத்திட வேண்டும். வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் சோப்புக்கரைசலால் கைகளை நன்கு கழுவிட வேண்டும். படித்த இளைஞர்கள், மாணவர்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்த விபரங்களை புரிந்து கொண்டு தங்கள் வீட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கொரோனா நோய் பரவும் தன்மை குறித்தும் தடுப்பூசியின் அவசியத்தையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு எழுச்சியை ஏற்படுத்திட முன்வர வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றிட வேண்டும். மேற்படி விதிமுறைகளை மீறுவோர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும். கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது விதிகளை மீறிசெயல்படுவோர் தொடர்பான புகார்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலை பேசி எண் 04633- 290548 அல்லது 1077 ஆகியவற்றில் பொதுமக்கள் எந்நேரமும் தெரிவிக்கலாம். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி ‘முகக்கவசம் அணியாமல் உள்ளே வர அனுமதி இல்லை” மற்றும் ‘முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது” என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு நோட்டீஸ்கள் உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் கடைகளில் ஒட்டுவதற்கும், அனைத்து ஆட்டோக்களிலும் ‘இரண்டு நபர்களுக்கு மட்டும் அனுமதி” என்ற ஸ்டிக்கரை ஒட்டிட வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமும் நடவடிக்கை எடுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தென்காசி மாவட்டத்தில் தடுத்திட மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை அளித்திட வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image