இவிஎம் எந்திரம் வைக்கப்பட்டுள்ள மையம் அருகே மர்ம கண்டெய்னர்; தென்காசியில் பரபரப்பு..

தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் வாக்குப்பதிவு எந்திரம் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ள கல்லூரியின் அருகே வைக்கப்பட்டிருந்த மர்ம கண்டெய்னரால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கொடிக்குறிச்சியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சுற்றிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், திடீரென இந்த மையத்தின் அருகே உள்ள சாய் நகர் பகுதியில் லாரி மூலம் கண்டெய்னர் ஒன்று கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்டெய்னர் உட்புறமாக மின் இணைப்புகள் கொடுப்பதற்கு வசதியாக பிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கண்டெய்னர் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இடத்தின் அருகில் புதிதாக தற்காலிகமாக மின்னிணைப்பு ஒன்றும் தரப்பட்டுள்ளது. இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தவே ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கட்சி பிரமுகர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் பின்புறம் குவிந்தனர். சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் கண்டெய்னரை அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து கண்டெய்னரை திறக்க செய்தனர். அதில் சந்தேகப்படும் படியாக எந்தப் பொருளும் இல்லை என்றும் அது காலி கன்டெயினர் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் இந்த இடத்தில் கண்டெய்னர் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை அறிய அந்த இடத்தின் உரிமையாளரை போலீசார் தொடர்பு கொண்டு கேட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி பெருமாள் புரத்தைச் சேர்ந்த மீனாட்சி நாதன் என்பவரின் மகன் செந்தில் நாதன் என்பவருக்கு சொந்தமான பட்டா இடத்தில் கட்டிட வேலைக்காக கன்டெயினர் இறக்கி வைத்து உள்ளது தெரியவந்தது. இருப்பினும் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை கண்டெய்னர் இந்த இடத்தில் நிற்க கூடாது என திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தெரிவித்தனர். அதன் பிறகு கிரேன் மூலம் கன்டெயினர் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும்,கண்டெய்னர் வைக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..