Home செய்திகள் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தத்துவஞானி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 17, 1975).

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தத்துவஞானி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 17, 1975).

by mohan

இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan) செப்டம்பர் 5, 1888ல் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி குடும்பத்தில் பிறந்தார். இவர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவருடைய தந்தை சர்வபள்ளி வீராசாமி மற்றும் தாயார் சீதம்மா ஆகியோர்கள் ஆவர். இவர் தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை சமுகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்களைக் கருதும் நிலை இன்றும் காண இயலும். இச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர்வீரனே. அதில் வெற்றியோ தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றி, அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு அனைவரும் தலைவணங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆங்கில கல்வியின் ஆதிக்கம் செய்த அக்காலங்களில், ஒரு பிரிவினர் அதனை முழுவதுமாக வெறுத்ததும், மறுபிரிவினர் அதனை முழுவதும் ஏற்றுக் கொண்டு சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை அற்றவராகவும் இருந்தார்கள். மூன்றாவது ஆங்கிலக் கல்வியின் நன்மையினைப் பெற்றதோடு அதன் மூலம் எண்ணற்ற நவீன கருத்துகளையும் வழங்குபவராகவும்; மூட நம்பிக்கைகள் மற்றும் அடிமைத்தனத்தை முற்றிலும் எதிர்ப்பராக திகழ்ந்தார்கள். இவர்கள் தாம் கால்பதித்த இடங்களில் புதிய அத்தியாயத்தினைப் படைப்பவராக விளங்கியவர்களுள் மிக முக்கியமானவர்கள் காந்திஜி, அரவிந்தர், தாகூர், விவேகானந்தர், கிருஷ்ணமூர்த்தி, இராதாகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் எனலாம்.

கல்வியாளர் என்ற வார்த்தை உச்சரிக்கும்போதெல்லாம் இவரது பெயரை என்றும் உச்சரிக்க மறந்ததில்லை. மேலைநாட்டுக்கல்வி எளிமையான பழக்க வழக்கங்கள், புத்தக விரும்பி டாக்டர்.எஸ். இராதாகிருஷ்ணன் ஆவார். அவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும் தன்பேச்சால் அனைவரையும் தன்பால் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார். தன் முதல் பணியினை சென்னை மாநில கல்லூரியில் துவங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து நீண்ட காலமாக தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் “சர்” பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு தன்னை முழுமையாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், மனமார ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார்.

இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியக்கல்வி இரண்டிலும் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். மனிதனுடைய வாழ்வு விலங்குகளிடமிருந்து வேறுபட்டுள்ளதை தனது பல்வேறு உரைகளில் எடுத்துரைக்கச் செய்தார். மனிதனை கடவுளின் படைப்பின் மகுடம் என்றும் மனம் போனபோக்கில் செல்லாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுதந்திரமாக தெரிவுச்செய்து செயல்படக் கூடியவனாக விளங்க வேண்டும் என்றார். மேலும் அவர் நாம் அனைவருமே வாழ்க்கையின் பொருள் என்னவென்பதையும், வாழ்வின் நோக்கம் என்னவென்பதையும் அறிய வேண்டியவனாகிறோம் என்றும் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கான திட்டத்தையும், நோக்கத்தையும் அறிந்து கொள்ளாமல் அமைதி காண இயலாது என்கிறார்.

உங்களது இலட்சியமும் நம்பிக்கையும் ஒரு கோட்பாட்டில் அமையாவிட்டால், உங்கள் நடத்தை சஞ்சலமடைந்து முயற்சி வீணாகிவிடும் என்கிறார். அதிலும் கோட்பாட்டில் நம்பிக்கை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் நடத்தை உருவாகிறது என்பதை திறம்பட உரைக்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனித்த வாழ்க்கையன்றி மற்ற மனிதர்களுக்கிடையில்தான் வாழ்கின்றான். இதன் விளைவாக தோன்றியதுதான் நாகரீகம். ஓவ்வொருவரும் இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ மற்றவரின் ஒத்துழைப்பும் இணக்கப்பண்பும் அவசியம் என்பதை மேலும் வலியுறுத்துகிறார். கோழைத்தனத்தை வெறுத்து தைரியத்தை ஆதரித்ததோடு, தைரியம் இல்லாமல் எந்த நற்பண்பும் வாழ முடியாது என்றும், எல்லா அம்சங்களையும் கவனமாகக் கணித்து திட்டமிட்டு தைரியமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அவரின் தின்னமான கருத்தாக இருந்தது.

நாம் எப்போதும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றார். இயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை அவர் என்றும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார். பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக இருந்த அவர் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி பள்ளிக் கல்வியிலும் சிறப்பான கொள்கைகளை வகுத்ததில் முக்கியப் பங்கு அவருக்குண்டு. ஒருவருடைய அறிவுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. அறிவு செயல்படுவதுதான் விவேகமாகும். எது நன்மை என்று தெரிந்தும் செய்யாமலிருப்பது, எது தீமை என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமை, ஆனால் தீமையை நீக்கி நன்மைக் காண நம்மால் இயலும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் மனதில் ஒரு தடத்தை பதித்து, பலமிக்க சக்தியாக மாறி, மென்மேலும் சேர்ந்து செயலுக்கு உரித்தான சக்தியாக விளங்கி அவைகள் அணிவகுத்து பழக்கங்களாக மாறுகின்றன. இத்தகைய பழக்கங்களை உடைப்பது கடினம் என்றாலும் ஏற்படுத்துவது எளிது ஆகும். மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் முந்தைய செயல்களின் சக்தியே வழிகாட்டுதலாக அமைகின்றன. நாம் “பழக்கம்” என்ற விதையை விதைத்துப் “பண்பு” என்ற பயிரை அறுவடை செய்வதாகவும், பண்பு தான் விதியாகும் என்கிறார் அவர்.

இராதாகிருஷ்ணனின் தத்துவத்தை “ஆன்மீக மனித நேயம்” என்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த தத்துவ அறிஞரும் ஏராளமாக எழுதியதில்லையாம். அவரது பிறந்த நாளை செப்டம்பர் ஐந்தாம் தேதியை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டுமென்றே ஆசிரியர்களின் தேசிய சம்மேளத்தின் கோரிக்கையை ஏற்று, நேருவின் முயற்சிக்குப்பின் அவ்வாறே முடிவு செய்யப்பட்டு நாமும் கொண்டாடி மகிழ்கின்றோம். உலக சிந்தனையாளர்களுள் ஒருவராக ஜொலிக்கவில்லை என்றாலும் நம் மனதில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்த கல்வியாளர்களுள் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஏப்ரல் 17, 1975ல் தனது 86வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!