Home செய்திகள் குழந்தைகள் தினம் – குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம் இன்று (நவம்பர் 14, 1889).

குழந்தைகள் தினம் – குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம் இன்று (நவம்பர் 14, 1889).

by mohan

ஜவகர்லால் நேரு (Jawaharlal Nehru) நவம்பர் 14,1889ல் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் “சிகப்பு நகை” என்று பொருள், இச்சொல்லிலிருந்து “ஜவஹர்லால்” என்ற பெயர் உருவானது. ‘காசுமீரப் பண்டிதர்’ என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று. இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது. நேரு குடும்பம் பிரதான வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து வந்த மோதிலால் நேரு, பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார். ராஜாக்கள், ஜமிந்தார்கள் மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பேரும் புகழுடன் நிதியும் அவரிடம் குவிந்தது. எனவே மோதிலால் தனது இருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்.

இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட்டும், கிருஷ்ணாவும் ஆனந்தபவன் என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர். ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை வீட்டிலிருந்து வெகுதொலைவு வந்ததையும் உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.

நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910ல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்குப் பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது. அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாகத் தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912ல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார். 1916ல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். கமலா கவுல் என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை பிப்ரவரி 7, 1916ல் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். 1919ல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.

1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக ஜூன் 15, 1945ல் கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர். நேரு இடைக்கால அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்தி செல்லும்போது மத வன்முறை, அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரியது ஆகியவற்றால் உண்டான கலவரங்கள் நேருவின் ஆற்றலை முடக்கின. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் நேரு தயக்கத்துடன் வேறு வழியின்றி ஜூன் 3, 1947ல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக ஆகஸ்ட் 15, 1947ல் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக “விதியுடன் ஒரு போராட்டம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நேரு நவீன புதுப்பிக்கப்பட்ட இந்திய முறைப்படியான மாநிலத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஆயத்தமானார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951ல் வரைந்தார். அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. தொழில்களை அதிகப்படுத்துதல், வருமான வரிகள்மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் நன்மைக்குச் சேவை செய்யும் சில நுணுக்கமான தொழிற்சாலைகளான சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள் தனியாரிடம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த திட்டமிட்டார். நேரு நில மறு பங்கீட்டை முதன்மைபடுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டும் திட்டத்தை அமல்படுத்தினார். மேலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையைப் பரப்பினார். தொடர்ச்சியான சமுதாய முன்னேற்றத் திட்டங்களைக் குடிசைத்தொழில்களை பரப்பும் நோக்கத்துடன் செயல்படுத்தினார். பெரிய அணைகளை (இவற்றை “இந்தியாவின் புதுக் கோவில்கள்” என்று அழைத்தார்) கட்ட ஊக்கப்படுத்தியதோடு அல்லாமல் விவசாயம், நீர் மின்சாரம் ஆகியவற்றை பெரிதும் ஆதரித்தார். அணுஆற்றலில் இந்தியா சிறக்கவும் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார். அவரது அரசாங்கம் உயர் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கவனித்து வந்தது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கழகங்கள் ஆகியவை அவற்றுள் சில. நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். இந்திய நாடாளுமன்றம், நேருவின் அறிவுரைப்படி இந்து மதச் சட்டத்தில், ஜாதி வேறுபாடுகளைக் குற்றமாகப் பாவித்தல், பெண்களுக்கான சமூக சுதந்திரம் மற்றும் சட்ட உரிமைகளை அதிக படுத்துதல் போன்ற மாற்றங்களை உருவாக்கியது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைசாதியினர் அனுபவித்த சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மேல் நிலையில் உள்ளவர்களுடன் அவர்கள் போட்டியிடும்போது ஏற்படும் குறைபாடுகளைக் களையும் வகையில் அரசாங்கப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்காக இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார். மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்த நேரு அரசில் சிறுபான்மையினர் அதிகளவில் பங்குபெறச்செய்தார்.

குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு மே 27, 1964ல் தனது 74அகவையில் புது தில்லியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். நேரு உலகம் முழவதும் அனைவராலும் அவருடைய நல்ல நெறிகளுக்காகவும், உயர்ந்த மனித பண்புக்காகவும் புகழப்பட்டார். அவரின் பிறந்தநாள் நவம்பர் 14 இந்தியா முழுவதும் “குழந்தைகள் தினமாக” கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தியக் குழந்தைகள் அவரை மாமா நேரு என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளனர். காங்கிரசு கட்சியின் புகழ் பெற்ற அடையாளமாக அவருடைய நினைவை அடிக்கடி கொண்டாடுகிறது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!