முதலாவது முழுமையான எலக்ட்ரானியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று (செப்டம்பர் 7, 1927).

தொலைக்காட்சி (Television,TV ) என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும். இதன் மூலம் ஒற்றை வண்ண (கறுப்பு-வெள்ளை) அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும். இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத் தருகின்றது. வழக்குமொழியில் தொலைக்காட்சி என்பது தொலைக்காட்சிப் பெட்டியையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொழில்நுட்பம் சார்ந்த தொலைக்காட்சி பரப்புகையையும் சூழமைவுக்கேற்ப குறிக்கலாம். தொலைவில் நிகழும் காட்சிகளைக் கொணர்ந்து காட்டுவதால் தொலைக்காட்சி எனப்படுகிறது. 1930களிலேயே தொலைக்காட்சிப் பெட்டிகள் புழக்கத்தில் வந்தமையால் இன்று வீடுகளிலும் வணிக மற்றும் பிற நிறுவனங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சாதாரணமாக உள்ளன.

தொலைக்காட்சியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஜான் லோகி பியார்டு (John Logie Baird) என்பவராவார். இவர் டெலிவிசர் (Televisor) என்ற தொலைக்காட்சிப் பெட்டியை 1923ஆம் ஆண்டில் உருவாக்கினார். இவர் ஒரு பொம்மையின் உருவத்தை மக்களுக்கு திரையில் தெரியும் காட்சியை முதலில் இயக்கிக் காட்டினார். அதன் பின் ஒரு சிறுவனின் முகத்தை தொலைக்காட்சியில் காட்டினார். வில்லியம் யாண்டன் என்பவருக்கு பணம் கொடுத்து இயந்திரத்தின் முன் நிற்கவைத்தார். அடுத்த அறையில் உள்ள திரையில் அவரின் முகம் தெரிந்தது. ஒலி அலைகள் மூலம் முதன்முதலாக தொலைக்காட்சியில் வில்லியம் யாண்டனின் முகம் காட்டப்பட்டது. இதன் பிறகு லண்டனில் தொலைக்காட்சி அலைவரிசை கட்டிடம் கட்டப்பட்டு நிகழ்ச்சி பரிமாற்றம் செய்யப்பட்டது. 1928ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு அலைவரிசை பரிமாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் உலகளவில் ஒலி பரப்பானது நடைபெறத் தொடங்கியது.

விளம்பரங்கள், மனமகிழ்வு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான ஊடகமாக பெரிதும் வளர்ந்துள்ளது. 1950களிலிருந்து மக்கள் கருத்தை உருவாக்குவதில் தொலைக்காட்சி ஊடகம் முன்னிலை வகிக்கிறது. ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர, 1970கள் முதல் ஒளிதப் பேழைகள், சீரொளி வட்டுக்கள், டிவிடிக்கள், அண்மையில் நீலக்கதிர் வட்டுக்கள் வந்தபிறகு பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயனாகின்றன. அண்மைக் காலங்களில் இணையத் தொலைக்காட்சி என இணையம் மூலமாகவும் தொலைக்காட்சி காணக்கூடிய வசதி வந்துள்ளது.

மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி (CCTV) போன்ற மற்ற வகைகள் இருப்பினும் இந்த ஊடகத்தின் முதன்மைப் பயன்பாடு பரப்புகைத் தொலைக்காட்சிக்காகும். 1920களில் உருவான வானொலி ஒலிபரப்பினை ஒட்டி தொலைக்காட்சி ஒளிபரப்பும் வடிவமைக்கப்பட்டது. மிகுந்த ஆற்றல் மிக்க வானலைப் பரப்புனர்களால் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி குறிப்பலைகள் தனிநபர் தொலைக்காட்சிப் பெட்டிகளை எட்டுகின்றன. தொலைக்காட்சி பரப்புகை அமைப்பு பொதுவாக 54–890 MHZ அலைக்கற்றையில் வரையறுக்கப்பட்ட அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுகிறது. தற்காலத்தில் பல நாடுகளிலும் ஒலிக் குறிப்பலைகள் முப்பரிமான ஒலியாகவும் (Wave) சூழொலியாகவும் பரப்பப்படுகின்றன. 2000ம் ஆண்டு வரை தொலைக்காட்சி சேவைகள் பொதுவாக அலைமருவிய குறிப்பலைகளாக ஒளிபரப்பப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக பல நாடுகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முற்றிலும் எண்ணிம (Digital) வடிவத்திற்கு மாறி விட்டன.

ஓர் வழமையான தொலைக்காட்சிப் பெட்டியில் பல மின்னணுவியல் சுற்றட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் முதன்மையானவை பரப்பப்பட்ட அலைக்கற்றையிலிருந்து விரும்பிய அலைவரிசையை மட்டும் பிரித்தெடுக்கும் இசைவித்த வானலை அலைவெண் வாங்கியும் அந்த அலைவரிசையை அதே அதிர்வெண் கொண்ட உட்புற அலைவரிசையுடன் கலக்க வைத்து தொலைக்காட்சி குறிப்பலைகளைப் பெறும் கலவைக்கருவியும் ஆகும். இத்தகைய இசைவியும் கலவைக்கருவியும் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒளிதக் காட்டிகள் எனப்படுகின்றன. தொலைக்காட்சி குறிப்பலைகள் பல சீர்தரங்களில் அமைந்துள்ளன. மேலும் ஒளிபரப்பு அமைப்புகளும் எண்ணிமத் தொலைக்காட்சி மற்றும் உயர் வரையறு தொலைக்காட்சி (HDTV) என முன்னேறி வருகின்றன.

தொலைக்காட்சி அமைப்புகள் பொதுவாக நேரடி கண்காணிப்பு கடினமானதாகவோ ஆபத்தானதாகவோ உள்ள இடங்களில் கடுங் கண்காப்பு, தொழிற்சாலை செயல்முறைக் கட்டுப்பாடு மற்றும் ஆயுத வழிசெலுத்துமை போன்ற செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சிகளின் சமூகத் தாக்கமாக சிறுவர்களின் தொலைக்காட்சிக் காணலுக்கும் கவனம்குறைந்த மிகு இயக்க பிறழ்வு (ADHD)க்கும் தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தொலைக்காட்சியானது இன்று சக்திவாய்ந்த, மக்களைக்கவர்ந்திழுக்கும் சாதனமாக உள்ளமையால் விளம்பரதாரர்கள் தமது விளம்பரங்களைக் காட்சிப்படுத்த அநேகமாகத் தொலைக்கட்சிகளையே நாடுகின்றனர். பல தொலைக்காட்சிகள் விளம்பரதாரர்கள் கொடுக்கும் பணத்தின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துகின்றன. விளம்பரம் தொலைக்காட்சியின் முக்கிய வருமானங்களில் ஒன்றாகவும் உள்ளது.

தொலைக்காட்சிப் பெட்டி (TV) என்பது தொலைக்காட்சியை காண்பதற்கான மின்னணுவியல் கருவியாகும். இதில் அதிர்வெண் இசைவி, காண்திரை மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் பயனர் கருவியாக தொலைக்காட்சிப் பெட்டி விளங்குகிறது. முதல் தொலைக்காட்சிப் பெட்டிகள் 1923ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டன. துவக்கத்தில் வெற்றிடக் குழல்களையும் எதிர்முனைக் கதிர்க்குழல் காண்திரைகளையும் பயன்படுத்தினர். 1953ஆம் ஆண்டில் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமான பிறகு இதன் பரவல் கூடுதலானது. பல சுற்றுப்புறப் பகுதிகளிலும் வீடுகளின் கூரைகளில் தொலைக்காட்சி அலைவாங்கிகளைக் காண முடிந்தது. முதல் தலைமுறை வீட்டுக் கணினிகளின் கணித்திரையாக தொலைக்காட்சிப் பெட்டிகளே விளங்கின.

தற்கால தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீர்மப் படிக தட்டை (LCD) காண்திரைகளும், திண்மநிலை மின்சுற்றுக்களும், நுண்செயலி கட்டுப்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல்வகையான ஒளிதக் குறிப்பலை இடைமுகங்களுடன் அமைந்துள்ளன. இதனால் தொலைக்காட்சிப் பயனர் வான்வழி இலவசமாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளுடன் கட்டணம் செலுத்திக் காணக்கூடிய கம்பிவடம் மற்றும் செய்மதித் தொலைக்காட்சிகளையும் எண்ணிம ஒளிதக் குறுவட்டுகள் அல்லது பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிதங்களையும் காண முடிகிறது. இதே கருவி மூலம் வீட்டுப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒளிதங்களையும் காணலாம். ஆரம்பகால கட்டத்தில் உருவங்களை உருவாக்கவும் மற்றும் உருவப்பெருக்கத்திற்கும் ஒரு சுழல் வட்டை பயன்படுத்தினர். இவை பொதுவாக குறைந்த தெளிவுத்திறன் மற்றும் திரை அளவு கொண்டிருந்தைமையால் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.

எதிர்மின்னிகளை வெளியிடும் இலத்திரன் (Electron) துப்பாக்கியையும், ஒளிரும் திரையையும் கொண்ட, வெற்றிடத்தாலான ஒரு குழாயே எதிர்மின் கதிர் குழாய் (cathode ray tube (CRT)) ஆகும். எதிர்மின்னியையும் ஏனைய அணுத் துணிக்கைகளையும் கண்டறிவதில் இவ்வுபகரணத்திற்குப் பெரும்பங்கு உண்டு. இது கடந்த தசாப்தத்தில் தொலைக்காட்சியிலும், கணினித் திரையாகவும் பயன்பட்டது. தற்போது புதிய தொழில்நுட்பங்களால் இது பின்தள்ளப்பட்டாலும் சில இடங்களில் இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் Digital Light Processing (DLP) என்பது ஒரு வகையான ஒளிப்படக்காட்டி தொழில்நுட்பத்திலமைந்த இலக்கமுறை நுண்ணாடிக் கருவியாகும். சில இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் தொலைக்காட்சி அலை வழிப்படுத்தியைக் கொண்டிருப்பதால் அது ஒரு தொலைக்காட்சிதை் திரை போல காட்சியளிக்கும்.

மின்மக் காட்சிச் சட்டம் (Plasma Display Panel (PDP)) என்பது பெருந்திரைத் தொலைக்காட்சிகளில் பொதுவாக 30 இஞ்சு அளவுகளில் (76 CM) அல்லது அதற்கும் பெரியது பயன்படுத்தப்படும் தட்டையான காட்சி சட்டம் ஆகும்.அயனியாக்கப்பட்ட வாயுக்களின் கலவையைக் கொண்ட இரண்டு கண்ணாடியின் சட்டங்களுக்கு இடையில் பல சிறிய கலங்களைக் (cells) கொண்டிருக்கிறது. இந்த செல்களில் உள்ள வாயு மின்னியல் ரீதியாக மின்மமாக மாறுகிறது. மின்மமானது புறஊதா ஒளிகளை உமிழ்கிறது. மின்மக் காட்சிகளிலிருந்து (plasma) படிக நீர்மத் திரைகள் (LCD) மாறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மற்றொரு மெல்லிய எடை கொண்ட தட்டையான காட்சி வெளிப்பாடு ஆகும். அது நின்றொளிர்தல் சார்ந்ததல்ல.

ஒரு திரவ படிக காட்சி (LCD) என்பது உரை, படங்கள் மற்றும் அசையும் படங்கள் போன்ற தகவல்களைக் இலத்திரன் முறையில் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான சட்டமாகும். இவை கணிப்பொறிகளின் கணினித்திரைகள், தொலைக்காட்சிகள், கருவிகளின் உரைகள், மற்றும் பல வகையான வானூர்தி கருவிளின் திரைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கருவிகளாகிய ஒளிபரப்பி, விளையாட்டுக் கருவிகள், மணிக்காட்டிகள், கைக்கடிகாரங்கள், கணிப்பான்கள் மற்றும் தொலைபேசிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எளிதான கட்டமைப்பு, பெயர்திறன் மற்றும் எதிமின் கதிர் குழாய்(CRT) காட்சிகள் தொழில்நுட்பத்தை விட மிகப் பெரிய திரைகளிலும் காட்சிகளை உருவாக்கும் கட்டமைப்பு விதம் இவற்றின் மிகச் சிறந்த சிறப்புக்கூறுகளில் அடங்கும். இவற்றின் மிகக் குறைந்த மின்சாரத்தை நுகர்ந்து செயல்படும் விதத்தினால் மின்கலத்தினால் இயக்கப்படும்.

மின்னணு கருவிகளில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இது, திரவ படிகங்களால் நிரப்பப்பட்டு, பிம்பங்களை உருவாக்குவதற்காக ஓர் ஒளி மூலம்(பின்னொளி) அல்லது எதிரொளிப்பியின் முன் வரிசையமைப்பில் வைக்கப்படும் பல படத்துணுக்கு அல்லது படவணுக்களாலான (Pixel), மின்னணு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் ஒளியியல் சாதனம் ஆகும். LCD தொழில்நுட்பம் உருவாவதற்கு வழிவகுத்த முந்தைய கண்டுபிடிப்பான திரவ படிகங்களின் கண்டுபிடிப்பு சுமார் 1888 ஆம் ஆண்டு காலத்தில் நிகழ்ந்ததாக தெரியவருகிறது. 2008 ஆம் ஆண்டு, உலகளாவிய LCD திரைகளுடன் கூடிய தொலைக்காட்சிகளின் விற்பனை CRT யின் விற்பனை எண்ணிக்கையை விட மிஞ்சியிருந்தது.

கரிம ஒளிகாலும் இருமுனையம் (OLED, Organic Light-Emitting Diode) என்பது ஒரு ஒளிகாலும் இருமுனையம் (LED), இதன் உமிழும் மின்னொளிர்வுப் பட்டை ஒரு கரிமச் சேர்வையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படலம் ஆகும். இச்சேர்வை மின்னூட்டம் பெறும் போது ஒளியை உமிழ்கிறது. கரிமக் குறைக்கடத்தியைக் கொண்ட இந்த மின்னொளிர்வுப் பட்டை இரு மின்முனைகளுக்கிடையில் அமைந்துள்ளது. பொதுவாக, இந்த மின்முனைகளில் ஒன்று ஒளிபுகு தன்மை கொண்டதாக இருக்கும். கரிம ஒளிகாலும் இருமுனையங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகள், கணினித் திரைகள், நகர்பேசிகள், தனிநபர் எண்மத்துணைகள் போன்றவற்றில் எண்ணிமக் காட்சிகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..