சுவனத்தை நிரப்பும் ஏழை, எளிய மக்கள்! ..ரமலான் சிந்தனை – 29..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

மனிதர்களில் ஏழை பணக்காரர் என்னும் தகுதி பிரித்தலை மனிதனே உருவாக்கி கொண்டதால் ஏழைகளும் பணக்காரர்களும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பேதம் கொண்டு பார்க்கப்படும் சூழல் உள்ளது.

இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் ஏழை என்னும் உளவியல் சிந்தனையை உள்வாங்கி கொண்டால், தம்மிடம் இருக்கும் பணம்,நகை,சொத்து சுகம் இவையாவும் மனித சமுதாயத்திற்கு பொதுவானதென்பதை புரிந்து கொள்வான்.

அல்லாஹ் தனது இறைமறையில் சொல்லும் போது “இறைவனோ தேவைகள் அற்றவன். நீங்கள்தான் அவனிடம் தேவையுள்ளவர்களாக இருக்கின்றீர்கள்” என்று சொல்லியுள்ளான். அதாவது நானே பணக்காரன் எனது அடியார்களான நீங்கள் தாம் ஏழைகள் என்னும் பொருள் கொண்ட வார்த்தை பிரயோகத்தை அல்லாஹ் தெளிவாக உணர்த்தி விட்டான்.

பணம் கொழித்தவர்கள் ஏழ்மை நிலையில் இருப்போரை பரிகாசம் செய்யாமல், அவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு தமது செல்வத்தில் சிலதை அவர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்விப்பதும் ஓர் அழகிய இறைவணக்கமாகவே பார்க்கப்படுகிறது.

பணக்காரர்கள் என்று மனிதரால் அடையாளம் காட்டப்படுபவரை விட ஏழைகள் என்று அல்லாஹ்வினால் அடையாளம் காட்டப்படும் மக்களே சுவனத்திற்குள் முதலாவதாக நுழைவார்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஏழைகள் பணக்காரர்களை விட ஐநூறு வருடங்கள் முந்தி சுவர்க்கத்தில் நுழைவார்கள்”.(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதி)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), இமரான் பின் ஹூசைன் (ரலி) ஆகிய நபித் தோழர்கள் அறிவிக்கிறார்கள் : நான் சுவனத்தை உற்றுப் பார்த்தேன் அதில் வசிப்பவர்களில் அதிகமானோர் ஏழைகளாக இருப்பதை கண்டேன்.(புகாரி, முஸ்லிம்)

ஆம், நாளை மறுமையில் சுவனத்தை நிரப்பும் மக்களாக ஏழை,எளியவர்களே இருப்பார்கள் என்பதைத்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ்களில் காணமுடிகிறது.

செல்வந்தர்களே! நீங்கள் கொடுக்கும் தர்மங்கள், உணவுகள், உடைகள் இவையாவும் வெறுமனே ஏழைகளுக்கு மட்டுமானதென்று கருதாமல் சுவனத்தை நிரப்பும் மக்களுக்கானதென நினைத்துப்பாருங்கள். உங்களின் செல்வங்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு வாரி கொடுக்க தூண்டும்.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் ஷிக்கீர்(ரலி) அறிவிக்கிறார்கள் : நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமுகம் வந்தேன். அப்பொழுது செல்வம் குறித்த எச்சரிக்கையை உணர்த்தும் “அல்ஹாகு முத்தகாஸுர்” என்னும் 102வது சூராவை அவர்கள் ஓதிகொண்டிருந்தார்கள்.

அப்பொழுது ஆதமின் மகன் என் செல்வம் என் செல்வம் என்று கூறுகிறான். ஆதமின் மகனே! உன் செல்வத்திலிருந்து நீ சாப்பிட்டு அழித்தவை தவிர , அல்லது நீ உடுத்திக் கிழித்தவை தவிர அல்லது தானதர்மம் செய்து முடித்தவை தவிர வேறு ஏதேனும் உனக்கு (மீதமாக) உள்ளதா ? என அண்ணல் நபி (ஸல்) கேட்டார்கள். (முஸ்லிம்)

இறைவன் தந்த செல்வம் யாவும் தமது தேவைக்கு போக மிச்சமீதியெல்லாம் ஏழைகளுக்குரியதாக கருதவேண்டுமே தவிர ஏழு தலைமுறைக்கு சொந்தமானதாக பார்க்க கூடாது என்பதை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

ஏழைகளுக்கு கொடுக்காமல் கஞ்சனாக இருப்பவனை பார்த்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:-(மறுமையின்)தீர்ப்பைப் பொய்யாக்குபவனை நீர் பார்த்தீரா? அவன் தான் அநாதைகளை வெருட்டுபவன். மிஸ்கீன்(ஏழை)களுக்கு உணவளிக்கத் தூண்டாதவன்.( அல்குர்ஆன் -107:1-3)

இப்படிப்பட்ட மனிதனுக்கு நாளை மறுமையில் அவனது பதிவேடு இடது கரத்தில் கொடுக்கப்படும் போது, “என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!” என்று கதறுவான்.(அல்குர்ஆன்: 69:28)

நாளை மறுமையில் சுவனத்தை நிரப்பும் இன்றைய நமது ஏழை, எளிய மக்களை நமது தர்மத்தாலும், உதவிகளாலும் கண்ணியப்படுத்துவோம், நாமும் சுவனவாசிகளாவோம்.

நமக்கான ரமலான் கூலியை அல்லாஹ்விடம் யாசிப்போம்! இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 30ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.