நல்லோராய் வாழ்வதற்கு உள்ளத்தை சீர்படுத்துவோம்…ரமலான் சிந்தனை – 27..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

ஒவ்வொரு மனிதரும் தான் நல்லோராய் வாழ வேண்டுமெனெ விரும்புவதை பார்க்கிறோம். அப்படி வாழ்வதற்கு தன்னிடமுள்ள பணமோ, பதவியோ, சொத்துக்களோ தேவையில்லை. உள்ளம் சீராக இருந்தாலே போதும்.

மனிதனின் தேகத்தில் உள்ளம் மிகச் சிறப்பு வாய்ந்த ஓர் அங்கமாகும். எவருடைய உள்ளம் உயிரோட்டமான உள்ளமாக இருக்கின்றதோ அவர் உயிரோட்டமுள்ள மனிதனாகவும், எவருடைய உள்ளம் மரித்த நிலையில் இருக்கின்றதோ அவர் மரித்த மனிதனாகவும் கருதப்படுவார். இதனடிப்படையிலேயே அல்லாஹ்வும் அவனது தூதரும் மனித குலத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்). (அல்குர்ஆன்- 33:5)

நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம் இருக்கின்றது, அது சீர் பெறுமானால் உடல் முழுமையும் சீர் பெற்றுவிடும், அது கெட்டுவிட்டால் உடல் முழுமையும் கெட்டுவிடும், அதுவே உள்ளமாகும்.” (புகாரி, முஸ்லிம்)

பெரும்பாலான மனிதர்கள் தவறான பாதைகளின் பக்கம் தடம் புரள்வதற்கு உள்ளமே காரணமாக அமைவதை காணலாம். உள்ளமானது எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. அவ்வப்போது நிலை மாறக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கும். அதற்கான காரணத்தை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் காண்போம்.

“ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டு வந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம் இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்)

இப்படி உள்ளமானது நிலைமாறும் தன்மையைக் கொண்டிருப்பதால், அதனைச் சீர் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது நமது கடமையாகும். அல்குர்ஆனிலும் நபி மொழியிலும் அதற்கான பிரார்த்தனைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (அல்குர்ஆன்- 3:8)

இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னை வழிப்படுவதின் பக்கம் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (முஸ்லிம்)

“மேலும், உன்னிடத்தில் அமைதியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)

நமது உள்ளங்கள் தடம் புரளாமல் சீராக இருக்க வேண்டுமென்றால், “ஃபித்னா” என்னும் குழப்பமான பேச்சுக்கள்,செயல்களில் இருந்து நம்மை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இன்றைய உலக வாழ்வியல் குழப்பம் மிகுந்ததாகவே இருப்பதை நாமறிவோம். முன்பெல்லாம் மனிதருக்கு மனிதர் நேருக்கு நேராக குழப்பம் செய்த காலம் மாறி இன்று சமூக வலை தளங்களின் மூலமாகவும் குழப்பம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஒரு மனிதன் (ஃபித்னா) குழப்பங்களுக்கு உட்பட்டு, அவற்றில் ஆர்வம் கொண்டு, ஈடுபாடு காட்டினால் அவனது உள்ளம் காலப்போக்கில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிய முடியாத அளவுக்கு இருளடைந்துவிடும். அதேபோன்று மற்றொரு மனிதன் குழப்பங்களை விட்டு ஒதுங்கி தன்னைத் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தால் அவனது உள்ளம் பளிச்சிடும் வெண்ணிறத்தை அடையும் என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

இதுபோன்ற குழப்பங்களை உள்வாங்கும் உள்ளம் மூன்று வகையான குணாதியசங்கள் கொண்டதாக இருக்கும். அவற்றை

இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 28ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.