தர்மம் செய்வதும் ஓர் அழகிய வணக்கம் தான்!..ரமலான் சிந்தனை-24..கீழை ஜஹாங்கீர் அரூஸி

இறைவனுக்கு பிடித்த எத்தனையோ நல்ல அமல்களில் மனிதர்கள் செய்யும் தர்மமும் ஒன்றாகும். “தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்” எனக்கூறப்படும் “சதக்கத்துல் ரத்துல் களா, வரத்துல் பலா” என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான நிகழ்வுகள் உண்டு.

விசுவாசம் கொண்டோரே! தங்கள் பொருட்களை (தர்மத்திற்காக) இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலி அவர்களது ரட்சகனிடம் உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) யாதொரு பயமுமில்லை. (இம்மையில் விட்டுச் சென்றதைப் பற்றி) அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்”.(அல்குர்ஆன் – 2:271)

தர்மங்களில் பல வகையுண்டு. ஒருவர் தனது குடும்பத்திற்காக செலவு செய்வதும் கூட தர்மத்தின் ஒருவகை என அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி),நூல் : புகாரி- 55)

அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத்தவிர வேறெதுவுமில்லாமல் இருக்கும் மறுமை நாளில் சுட்டெரிக்கும் வெப்ப சலனத்தில் இருந்து ஒவ்வொரு ஆத்மாவும் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத்தேடி ஏங்கி தவிக்கும் போது, தமது இடது கரத்துக்கு தெரியாமல் வலது கரத்தில் தர்மம் செய்த நல்லடியானுக்கு மட்டும் தனது அர்ஷின் நிழலில் ஒதுங்கிட அல்லாஹ் அனுமதியளிப்பானாம்.(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல் : புகாரி 660)

ஒருவருக்கொருவர் தர்மம் செய்வதின் மூலம் அல்லாஹ் அடைகின்ற மகிழ்ச்சி குறித்து, “ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல் : புகாரி 5352)

பணம்,பொருள்,தங்கத்தை தர்மம் செய்வது போன்று ஒருவர் மரம்,செடி ஏதேனும் ஒன்றை மண்ணில் ஊன்றி அதை வளர்த்தாலும் அதுவும் தர்மம் என்கிறார்கள் பெருமானார்(ஸல்) அவர்கள்.

ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி),நூல் : புகாரி 2320)

சிறு பேரீச்சம் பழத்தின் தர்மமும் கூட நரகத்தில் இருந்து ஒரு அடியானை காக்கும் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். (அறிவிப்பாளர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்-புகாரி:6539)

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு, அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல்:புகாரி: 1410)

இறந்து போனவர்களின் பெயரால் செய்யப்படும் தர்மத்திற்கான நற்கூலியை குறைவின்றி இறந்தவர்களின் கணக்கில் அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.

ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள், “நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்” என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி:2756)

மறுமையில் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு ஷஹீதானவர்கள் ஜிஹாத் என்னும் சுவனத்தின் வாசல் வழியாகவும், தொழுகையாளிகள் தொழுகையின் வாசல் வழியாகவும், நோன்பாளிகள் ரய்யான் என்னும் வாசல் வழியாகவும் சொர்க்கத்திற்குள் அழைக்கப்படுவதைப் போன்று தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துன்பமும் இல்லையே! எனவே எவரேனும் சுவனத்தின் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல் : புகாரி :1897)

அல்லாஹ்வின் அடியானை ஒவ்வொரு நாளும் கண்காணிக்கும் மலக்குகள்!

ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். இன்னொருவர், “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூல்-புகாரி:1442)

ஈந்துவக்கும் ஈகையாளர்களாய் வாழ்ந்து இம்மையிலும் மறுமையில் வெற்றி பெறுவோமாக!

குடும்ப உறவைப் பேணுவதும் அழகிய இபாதத்துதான்! என்பதை இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை- 25ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி