இறையச்சம் நம்மில் எப்படி இருக்க வேண்டும்? ..ரமலான் சிந்தனை-22..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

இறைவனின் அடியார்களிடம் “தக்வா” என்னும் இறையச்சம் இருக்க வேண்டுமென்பதையும் அதனால் அம்மனிதன் இம்மை, மறுமை ஈருகிலும் கண்ணியப்படுத்தப்படுவதையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் வான்மறையும் அழகிய முறையில் நமக்கு பாடங்களாக உள்ளன.

இறையச்சம் குறித்து இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்:- “முஃமீன்களே! அல்லாஹ்வை _அவனை அஞ்ச வேண்டிய முறைப்படி பயப்படுங்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டவர்களாகவே அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்” (அல்குர்ஆன் – 3:102)

இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்கு அச்சப்பட்டு வாழ்வது குறித்தும் மரணத்தின் போது முஸ்லிமாக மரணிக்க வேண்டுமென்பது குறித்தும் அல்லாஹ் கூறியுள்ளான்.

மனிதரிடம் அல்லாஹ்வின் அச்சம் எப்படி இருக்க வேண்டுமென்பதை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:- “நீங்கள் எங்கு இருக்கின்ற போதும் அல்லாஹ்வினைப் பயந்து கொள்ளுங்கள்” (திர்மிதி)

மனிதனிடம் இருக்கும் இறையச்சத்தில் சக மனிதனின் நலம் நாடுதலும் இருக்கிறதென்பதை அவன் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப வாழவேண்டுமென்று அல்லாஹ் தனது இறைமறையில் இவ்வாறு கூறுகிறான்:-

நன்மை செய்வதிலும் அல்லாஹ்வை அஞ்சி நடப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருங்கள். மேலும் பாவம் செய்வதிலும் வரம்பு மீறுவதிலும் ஒருவருக்கொருவர் உதவியாளராக இருக்காதீர்கள்” (அல்குர்ஆன் – 5:2)

சக மனிதனின் நலம் நாடுவதில் மிகவும் முக்கியமானது, எந்த வகையிலும் ஒருவனை இறைமறுப்பு கொள்கையின் பக்கம் சென்று விடாமல் தடுப்பதும், அதையும் மீறி அவன் சென்று விட்டால் அவனது செயலை நியாயம் கற்பிக்காமல் இருப்பதும் நமக்கான கடமை என உணர வேண்டும்.

வரம்பு மீறுவதில் ஒருவருக்கொருவர் உதவியாளராக இருக்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்வதை இன்று நம்மில் சிலர் புறந்தள்ளிவிட்டு இஸ்லாத்தின் உயரிய மாண்புகளுக்கு எதிராக இவ்வுலக அற்ப வாழ்க்கைக்காக எம்மதமும் சம்மதம் என பேசக்கூடிய நிலையும் அது அவரவர் விருப்பம் என மற்றவர் கூறுவதையும் காணலாம்?

இத்தகைய மனிதர்கள் நாளை இறைவனின் முன்பாக நிற்கும் போது கைசேதப்பட்ட நிலையில் காணப்படுவார்கள் என்பதையே அல்லாஹ் தனது இறைமறையில் பல்வேறு இடங்களில் எச்சரித்திருக்கின்றான்.

அல்லாஹ் மூன்று விஷயங்களில் ஓர் அடியானிடமிருந்து உண்மையான, போலித்தனமில்லாத நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றான்.

1) அல்லாஹ்வை மதிக்கும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்..

“அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு அவர்கள் மதிக்கவில்லை”. (அல்குர்ஆன்- 6:91)

2) அல்லாஹ்விற்காக தியாகம், அர்ப்பணிப்பு செய்யும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்…

“(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எவ்வாறு தியாகம், அர்ப்பணிப்பு செய்ய வேண்டுமோ, அவ்வாறு தியாகம், அர்ப்பணம் செய்யுங்கள்”. (அல்குர்ஆன்- 22:78)

3).அல்லாஹ்வை பயந்து வாழும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்…

இதற்கான இறைவனின் எச்சரிக்கை வசனத்தை இந்த பதிவின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இறையச்சமின்றி வாழும் மனிதன் குறித்து நபித்தோழர் ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்கள் கூறிய வார்த்தை “வேடதாரிகள்” என்பதாகும்.

இதுகுறித்து அபூபக்கர்(ரலி) அவர்கள் பெருமானாரிடம் தகவல் சொன்னதற்கு அண்ணலாரின் பதில் எதுவென்பதை?

இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 23ல் காணலாம். -கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..