குகைக்குள் சிக்கிய மூவர் மன்னிப்பின் மூலம் மீண்டது எப்படி? ..ரமலான் சிந்தனை – 21..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

எந்த மனிதன் தனது செயல்கள் ஒவ்வொன்றிலும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர்பார்த்தவனாக வாழ்கின்றானோ? நிச்சயம் அம்மனிதன் இறையருளுக்குரியவன் என்பதை தான் கீழ்வரும் குகைவாசிகள் மூவர் விசயம் நமக்கு உணர்த்துகின்றன.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. செய்வதறியாது திகைத்த அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) இறையச்ச செயல் தான் காப்பாற்ற முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், இறையச்சத்துடன் நடந்து கொண்ட விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

எனவே, அவர்களில் ஒருவர் “இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.

ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது.

இறைவா! நான் இதை உனது அச்சத்தினால் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அப்போது (பாறை விலகி) சிறிது இடைவெளி உண்டானது.

மற்றொருவர்;- “இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் ஒருத்தி எனக்கு இருந்தாள். அவள் மக்களிலேயே எனக்கு அதிகப் பிரியமானவளாக இருந்தாள். நான் அவளை எனக்கு ‘இணங்குமாறு’ அழைத்தேன். நான் அவளிடம் நூறு தீனார்களைக் கொண்டு வந்தாலே தவிர எனக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டாள். நான் அதனைத் தேடி அடைந்தபின் அவளிடம் எடுத்துக்கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் தன்னை என் வசம் ஒப்படைத்தாள்.

நான் அவளிடம் உடலுறவிற்காக அமர்ந்த பொழுது அவள், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள். எனது கன்னித்தன்மையை அதற்குரிய (சட்டப்பூர்வமான) உரிமையின்றி (திருமணம் முடிக்காமல்) திறக்காதே’ என்று சொன்னாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். நூறு தீனார்களை (அவளிடமே)விட்டுவிட்டேன். நான் இதை உன் அச்சத்தின் காரணத்தால் செய்ததாக நீ கருதினால், எங்களைவிட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக!’ அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவிற்கு (இன்னும் சற்று) விலகியது.

மற்றொருவர், “இறைவா நான் மூன்று ஸாவு (ஒரு ஃபரக்) கேழ்வரகு அல்லது நெல் கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை (வாங்கிக் கொள்ளாமல்) விட்டுவிட்டுச் சென்றார். அந்தக் கேழ்வரகு அல்லது நெல்லைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன்.

பிறகு (ஒரு நாள்) அவர் என்னிடம் தன் கூலியைக் கேட்டு வந்தார். நான் அவரிடம் ‘அங்கு சென்று, இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன்.

அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை என்றதும், ‘உங்களிடம் எனக்குரியது ஒரு ஃபரக் அளவு தானியம்தானே!’ என்று கேட்டார். நான் அவரிடம், இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் (நீவிட்டுச் சென்ற) அந்த ஒரு ஃபரக் தானியத்தை பயிர் செய்து அதன் மூலம் கிடைத்தவை தாம்’ என்று சொன்னேன்.

அவர் அவற்றை மகிழ்ச்சியோடு ஓட்டிச் சென்றார். (அதை நீ அறிவாய்) நான் அதை உன் அச்சத்தின் காரணமாகவே செய்ததாக நீ அறிந்திருந்தால் எங்களைவிட்டு (மீதமிருக்கும் அடைப்பையும்) நீக்குவாயாக!” என்றார். எனவே, அல்லாஹ் அவர்களைவிட்டு பாறையை (முழுமையாக) நீக்கிவிட்டான். அவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள். என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி), புகாரி – 2215)

பெற்றோர்களை நேசம் கொள்வதும் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் பணிவிடை செய்வதும் அல்லாஹ்வின் அருளுக்குரியதாக இந்த குகைவாசிகள் சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளன.

விபச்சாரம் அல்லாஹ்வின் கோபத்திற்குரியதும், அதனை விட்டு விலகி இருப்பதும் அல்லாஹ்வின் அருளுக்குரியதாக இங்கே பார்த்துள்ளோம்.

அடுத்தவரின் பொருள் நயா பைசாவாக இருந்தாலும் அது அமானிதம் என்பதும், அதை உரியவரிடம் ஒப்படைப்பது அல்லாஹ்வின் அருளுக்குரியதாகவும் இங்கே பார்த்துள்ளோம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அல்லாஹ்வை அச்சம் கொள்வோமானால், எத்தனை பெரிய சோதனைகளானாலும் அதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான் என்பதை இந்த குகைவாசிகள் மூலம் நம் உணர்ந்து இறையச்சம் உடையோராய் வாழ்வோமாக!

இறையச்சம் நம்மில் எப்படி இருக்க வேண்டும்? என்பதை இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 22ல் காணலாம். -கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..