அபுஜஹல் தலையை வெட்டி வீழ்த்திய இரண்டு சிறுவர்கள்!..ரமலான் சிந்தனை – 18..-கீழை ஜஹாங்கீர் அரூஸி…

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:- பத்ருப் போரின் போது நான் படையினரோடு நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளம்வயதுடைய இரு அன்சாரி சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் என்னை நோக்கி கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹலை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை திட்டுகிறான் என்று கேள்விப்பட்டேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்.) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.

சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை நோக்கி சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹலை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள்.

அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக்கறை தென்படுவதால்) அபூ ஜஹலுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ருக்கு உரியவை என்று கூறினார்கள்.

அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ரு (ரலி) அவர்களும் ஆவர். (புகாரி 3141)

குறைஷியரின் முக்கிய தலைவனான அபூஜஹல் கொல்லப்பட்ட பின்னர் எதிரிகளின் வேகம் குறைய ஆரம்பித்தன. குறைஷியர்களின் மிக முக்கிய தலைவர்களான உத்பா, ஷைபா, வலீது போன்ற 24 பேர் கொல்லப்பட்டனர்.

எதிரிப்படையில் மொத்தமாக 70 பேர் கொல்லப்பட்டு, 70 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்காவில் நபியவர்கள் கஃபாவில் தொழும்போது ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனைப்படுத்தியவர்கள் பத்ரு களத்தில் வேரறுத்த மரங்களாக சரிந்தனர் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.(புகாரி:3976)

முஸ்லிம்களில் 14 பேர் ஷஹீதாகினர். அவர்களில் 6 முஹாஜிர்கள், 8 அன்ஸாரிகள் ஆவர். எனவே, முஸ்லிம்களுக்கு பத்ர்களத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது. (புகாரி:3976)

நோன்பு கடமையாக்கப்பட்ட ஆண்டிலேயே சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1440 ஆண்டுகளாகி விட்டன.

சத்திய வழி நடப்போர் பலவீனர்களாய் இருந்தபோதிலும் அசத்தியவாதிகள் எவ்வளவு தான் பலமுள்ளவர்களாய் இருந்தபோதும் சூழ் நிலைகளை மாற்றி சத்தியவாதிகளுக்குப் பாதுகாப்பையும் வெற்றியையும் அளித்திட இறைவனால் முடியும் என்பதை “பத்ரு” போரில் வானவர்களைக்கொண்டு இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிந்ததன் மூலம் இறைவன் அதனைச் செய்தும் காட்டிவிட்டான்.

சத்தியத்திற்காக போராடுவதும் அதற்காக உயிரையே இழப்பதும் கூட ஓர் வணக்கம் என்பதைத்தான் பத்ரு போரில் தன்னுயிர் நீத்த 14 ஷுஹதாக்கள் நிரூபணம் செய்து அல்லாஹ்வின் உயரிய இறைநேசர்களாய் தகுதி பெற்றுக்கொண்டனர்.

இறை வழியில் தியாகம் செய்வது ஓர் இறைவணக்கமே. இந்த உணர்வுகள், படிப்பினைகள் என்றும் பசுமையோடு இருக்க “பத்ரு” போர் நிகழ்ச்சிகள் நமக்கு என்றென்றும் படிப்பினையாக இருக்கட்டும்! வல்ல அல்லாஹ் போதுமானவன்.

பாவத்தை விட்டும் நீங்கிடவும்,பாவத்தின் பக்கம் நெருங்காமல் இருப்பது குறித்தும் இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 19ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.