பத்ரு போரின் முதல் மூன்று முன்னணி வீரர்கள்!..ரமலான் சிந்தனை-17..-கீழை ஜஹாங்கீர் அரூஸி..

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதே “பத்ரு போர்” ஆகும். இது ஒரு நீண்ட நெடிய வரலாற்று தொகுப்பாகும். நாம் சுருக்கமாக விவரித்துள்ளோம்.

மதீனாவில் பெருமானாரோடு இருந்த நபித்தோழர்களோடு கலந்திருந்த ஒன்றிரண்டு முனாஃபிக் என்னும் நயவஞ்சகர்கள் மக்காவின் குறைஷியர் எதிரி படைகளுக்கு ரசூலுல்லாஹ் மக்காவின் மீது படையெடுக்க வருகிறார்கள் என்னும் பொய் செய்தியை அனுப்பி மக்காவையும் மதீனாவையும் ஒருவித பதட்டத்துடன் வைத்து ரசித்தனர்.

இன்னொரு பக்கம் மக்கா குறைஷிகள் முப்பது பேருடன் வியாபார நிமித்தமாக சிரியா சென்று பெரும் பொருட்களோடு மக்கா திரும்பிக் கொண்டிருந்த குறைஷித் தலைவர்களில் ஒருவரான அபூசுப்யானை தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதற்கு முஹம்மது நபியின் ஆட்கள் வருவதாக அபூசுப்யான் காதில் விழுவது போன்று நயவஞ்சகர்கள் வதந்தியை பரப்புகின்றனர்.

இந்த இரண்டு வதந்திகளும் தான் மக்கத்து குறைஷியர்களை போருக்கு தூண்டியது. அதன் விளைவாக ஏற்பட்டதே பத்ரு போர்.

வதந்தியை நம்பிய அபூசுப்யான் மக்கத்து குறைஷியரிடம் பாதுகாப்பு கேட்கவே, முஸ்லிம்களின் மீது கடும் சினம் கொண்ட அபுஜஹல் தலைமையிலான படை மக்காவை நோக்கி புறப்பட்டனர். பின்னர் தமது பயணத்தை மதீனாவை தவிர்த்து வேறொரு பாதை வழியாக மக்கா செல்ல ஆரம்பித்ததும் தமக்கு பாதுகாப்பு தேவையில்லை குறைஷியர் படை மக்கா திரும்பட்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அபூசுப்யானின் கோரிக்கையை நிராகரித்த அபூஜஹல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொண்ட தமது படையை பத்ரில் களமிறக்கினான்.

குறைஷிகள் படை திரட்டி வருகிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் பெருமானார் அவர்களும் தற்காப்புக்காக 300 க்கும் மேற்பட்ட சஹாபாக்களைக் கொண்டு படை ஏற்படுத்தி பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமலான் பிறை 17 அன்று நடைபெற்றது. இஸ்லாத்தில் நடைபெற்ற முதல் போர் இது.

நபி (ஸல்) அவர்கள் நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும். அதில் முதலாவது போர் பத்ருதான் (ஜைத் பின் அர்கம் (ரலி) புகாரி 3949).

பத்ரு போரில் 60க்கும் கூடுதலான முஹாஜிர்(மக்காவாசி)களும், 240க்கும் கூடுதலான அன்சாரி (மதினாவாசி)களும் கலந்து கொண்டனர். (பரா இப்னு ஆஸிப் (ரலி): (புகாரி 3956,3957,3958)

முஸ்லிம்களின் படைப்பிரிவில் 3 குதிரைகளும், 9 உருக்குச் சட்டைகளும், 8 வாள் ஆயுதங்களும், 70 ஒட்டகங்களும் இருந்தன.

எதிரிகள் படையில் 100 குதிரைகளும், 700 ஒட்டகங்களும் ஏராளமான யுத்த தளவாடங்களும் இருந்தன.

நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இப்போரில் முஸ்லிம்கள் நோன்பு வைத்திருந்தார்கள். போர்க்களத்தில் ஐவேளை தொழுகை, திக்ரு, துஆ, இரவு நேர தொழுகை மற்ற இபாதத்துகள் தவறாமல் நடைபெற்று வந்தன.

யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.

இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்)

நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான். “நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்மு) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்”. (அல்குர்ஆன் 08:09)

நபி (ஸல்) அவர்கள் தனது போராளிகளை அணிவகுக்கச் செய்து யுத்த தர்மங்களைப் போதித்து, அறிவுறுத்தினார்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு, ரமழான் மாதம் பதினேழாம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது. இஸ்லாமியப் போராளிகள் நோன்புடனும், காபிர்கள் ஆபாச களியாட்ட லீலைகளுடனும் களம் புகுந்தனர்.

அன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் மோதுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர். இதனடிப்படையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர்.

முஸ்லிம்கள் சார்பாக அன்சாரிகள் மூவரை நபிகளார் அனுப்பியபோது எங்களுக்கு நிகரான குறைஷிகளை அனுப்புங்கள் என்றனர். அப்போது நபியவர்கள் உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி), அலீ (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். இவர்கள் மூவரும் காஃபிர்களில் வந்த பின்வரும் மூவருடன் போரிட்டு அவர்கள் தலைகளை நிலத்தில் உருட்டினர்.

ஹம்ஸா (ரலி)அவர்கள் உத்பாவையும், உபைதா (ரலி)அவர்கள் வலீத் என்பவனையும், அலீ (ரலி)அவர்கள் ஷைபா என்பவனையும் வெட்டி தலைகளை பூமியில் உருட்டினர். அல்லாஹு அக்பர்!

குறைஷியரின் மூன்று முன்னணி தலைவர்களை கொன்றதும் போர்க்களம் சூடு பிடிக்கிறது. யார் யாரை வெட்டினர் என்ற குறிப்பு சரியாகக் கிடைக்கவில்லை. களத்தின் நடுவில் புகுந்து போர் புரிந்ததால், அவற்றை சரியாக கூர்ந்து யாராலும் சொல்ல முடியாது. எனினும், அபூஜஹலை கொலை செய்தது மட்டும் இரண்டு சிறுவர்கள் என்பதை வரலாற்றில் காணமுடிகிறது.

யார் அந்த சிறுவர்கள் என்பதை இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 18ல் காணலாம். -கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..