தம் உயிரை பணயம் வைத்து அண்ணலாரை பாதுகாத்த அலீ(ரலி)! ..ரமலான் சிந்தனை – 16..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொன்றே விடுவதென குறைஷிகள் முடிவு செய்தனர். அன்றே மக்காவை விட்டு வெளியேறி விடுமாறு நபிகளாருக்கு இறைவனின் கட்டளையும் வந்தது.

இறைவனின் கட்டளையை கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘வழமையாகத் தாங்கள் படுத்துறங்கும் மஞ்சத்தில் இன்று படுத்துறங்க வேண்டாம்’ என அண்ணலாரை எச்சரித்து சென்றனர்.

அண்ணலார் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லப் புறப்பட்டபோது, அநேகமாய் அவர்களின் விரோதிகளாலும், மற்றோராலும் தங்களிடம் வைக்கப்பட்டிருந்த அமானிதப் பொருட்களை உடையவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு வருமாறு கூறி அலீ (ரலி) அவர்களை மக்காவில் இருக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

எதிரிகள் பெருமானாரைக் கொள்வதற்காக வீட்டைச் சுற்றிக் காத்திருக்கிறார்களென்பது தெரிந்திருந்தும் அலீ (ரலி) அவர்கள் கிஞ்சித்தும் அஞ்சாமல், நபிகளாரின் படுக்கையில், நபிகளாரின் போர்வையால் போர்த்திக்கொண்டு அவர் உயிருக்கே ஆபத்தான நேரத்திலும் கூட அங்கு உறங்கப் பின்வாங்கவில்லை.

நபி(ஸல்) அவர்களும் இரவோடு இரவாக மக்காவை விட்டு வெளியேறி மதீனா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய போது மக்கத்து எதிரிகளின் கண்களை விட்டும் அல்லாஹ் மறைத்து பாதுகாத்தான்.

ஹழ்ரத் அலீ (ரலி) அவர்கள் மூன்று நாட்கள் வரை மக்காவில் தங்கி தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தாங்களும் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் நபிகளாரின் இல்லத்திலேயே வந்து சேர்ந்து கொண்டார்கள்.

துள்ளும் பருவத்திலேயே துணிவாய் துளிர்விட்ட ஹழ்ரத் அலீ(ரலி) அவர்களின் வீரம் வெளிச்சமிடும் வகையாக பல போர்களின் வெற்றி அமைந்தது. பல போர்களங்களையும் கண்டார்கள். அவை அனைத்திலும் வெற்றியை சேர்க்கும் வேங்கையென முன்னின்றார்கள்.

இவர்கள் ஏராளமான யுத்தங்களில் கலந்து கொண்டுள்ளார்கள். தபூக் யுத்தத்தை தவிர்த்து ஏனைய யுத்தங்களில் நபிகளாரோடு இருந்து நிகரற்ற வீரத்தை காண்பித்தார்கள்.

பாத்திமா(ரலி) அவர்களை பெண் கேட்டு பெருமானாருக்கு முன்பு தயங்கி நின்ற ஹழ்ரத் அலீ(ரலி) அவர்களின் கோரிக்கையை புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு தமது மகளாரை 21 வயது கொண்ட ஹழ்ரத் அலீ (ரலி) அவர்களுக்கு நபிகளார் மணம் முடித்து கொடுத்தார்கள்.

அன்றைய சூழலில் ஹழ்ரத் அலீ (ரலி) அவர்களிடம் ஓர் உடைவாள், ஒரு புரவி, ஒரு போர் அங்கி ஆகியவை மட்டுமே சொத்துக்களாக இருந்தன. போர் அங்கியை விற்று அந்த பணத்திலேயே தன் திருமணச் செலவுகளை முடித்தார்கள்.

அலீ(ரலி) – பாத்திமா (ரலி) தம்பதிகளின் மணவாழ்வு மணக்கலாயிற்று. கணவரின் கரம் பிடித்து மணமகளார் தம் தந்தையிடம் பெற்றுவந்த அன்பளிப்பான ஒரு போர்வை, கயிற்றிலான ஒரு கட்டில், தோலிலான ஒரு மெத்தை, தோலிலான ஒரு குடுவை, ஒரு நீர் துருத்தி, இரண்டு திருகைகள், இரண்டு பானைகள் ஆகியவை மட்டும் கொண்டதாக இருந்தது. இதை கொண்டே இருவரும் தன் வாழ்கையை சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் ஹஸன், ஹுஸைன் என்ற மக்கட் செல்வங்களும் பிறந்து வளரலானார்கள். அண்ணலாரின் பேரக்குழந்தைகளான ஹஸன்,ஹுஸைன் இருவர்களின் தந்தை என்பதால் அலீ(ரலி) அவர்களை மக்கள் எல்லோரும் “அபுஸ்ஸிப்தைன்” இரண்டு பிள்ளைகளின் தந்தையே என செல்லமாக அழைத்தனர்.

இஸ்லாமிய வரலாற்றின் முதல் போர் என சொல்லப்படும் பத்ரு யுத்தத்தின் முதல் வரிசையின் மூன்று முன்னணி போர் வீரர்களில் ஒருவராக ஹழ்ரத் அலீ(ரலி) அவர்கள் களம் கண்டனர்.

அந்த போரின் வரலாற்றையும் அலீ(ரலி) அவர்கள் யாரை எதிர்கொண்டார்கள்? என்பதையும் இன்ஷா அல்லாஹ்..

.ரமலான் சிந்தனை 17ல் காணலாம். கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..