ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் கூறிய நற்சான்றுகள்!..ரமலான் சிந்தனை 14..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய தோழராகவும் பெருமானாரின் மொழி பெயர்ப்பாளராகவும் பெருமானாரால் சொர்க்கவாசி என அடையாளம் காட்டப்பட்டவராகவும் திகழ்ந்தார்கள் ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள்.

நபிகளாரின் தாயிஃப் பயணத்தில் உடன் சென்று பெருமானாருக்கு உறுதுணையாக இருந்தார்கள். தாயிஃபில் இருந்து மக்கா திரும்பும் வழியில் நக்லா பள்ளத்தாக்கில் நபிகளாருடன் தங்கியவர்கள் ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள் என்பதை ரமலான் சிந்தனை 4ல் பார்த்தோம்.

ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:- இரண்டு விஷயத்தில ஜைத் (ரலி) அவர்களுடன் போட்டியிட்டு வெல்ல எவராலும் இயலாது. 1) திருக்குர்ஆன் தெளிவு, 2) வாரிசுரிமைச் சட்டம், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட சட்டத் தெளிவு. இவ்விரு விஷயங்களிலும் ஜைது (ரலி) அவர்கள் தன்னிகரற்று விளங்கினார்.

மஸ்ரூக் (ரலி) சொல்கின்றார்கள்: நான் மதீனாவிற்கு வந்த போது ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களைக் கல்வியில் மிகச் சிறந்து விளங்கும் அறிஞர்களில் ஒருவராகக் கண்டேன்.

ஸாபித் பின் உபைத்(ரலி) சொல்கிறார்கள்: ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து இருக்கும் போது மிகவும் கலகலப்பாக இருப்பார். மக்களுடன் அமர்ந்திருக்கும் போது அமைதியாக இருப்பார்.

அரபுலக மக்களின் மதிக்கத்தக்க ஒரு சகாபியாகவும், மார்க்க சட்ட மேதையாகவும் வாழ்ந்த ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள் தமது குடும்பத்தாரோடு இருக்கும் போது கலகலப்பாகவும்,நகைச்சுவையாக பேசக்கூடியவராகவும் இருந்த பண்பு பெருமானாரிடம் கற்றதாகும்.

ஆம், அண்ணல் நபி(ஸல்) அவர்களும் தமது குடும்பத்தாரிடம் நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் பேசக்கூடியவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை அன்னை ஆயிஷா பிராட்டியாரின் பல்வேறு தகவல்களில் காணலாம்.

கபீஸா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: ஜைது பின் தாபித் (ரலி) அவர்கள் ஷரீஅத் நீதிமன்றத்தின் மாபெரும் நீதிபதியாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் முஃப்தியாக, நன்றாக மாமறை திருக்குர்ஆனை ஓதத் தெரிந்த காரியாக, பாகப்பிரிவினைச் சட்ட நிபுணராக இருந்திருக்கின்றார்.

ஆக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், பிறகு அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் காலத்திலும் பின், உமர் கத்தாப் (ரலி) அவர்கள் காலத்திலும், பின் உத்மான் (ரலி) அவர்கள் காலத்திலும் திருக்குர்ஆன் மனனம் செய்து பிறகு அதைத் தொகுத்து சரிபார்த்து வழங்கிய பெருமை இநத நபித்தோழருக்கு உண்டு. இதை விடச் சிறந்த ஒரு பணி வேறு இருக்கவே முடியாது.

இத்தனை சிறப்பு வாய்ந்த ஜைது பின் தாபித் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 45 ஆம் ஆண்டு தனது 55 வது வயதில் இவ்வுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தாரகள். ஆம், இறைவனின் நாட்டப்படி இவ்வுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார்கள்.

ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) அவர்களின் மறைவு செய்தியறிந்து பல்வேறு நபித்தோழர்களும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்களின் இரங்கல் செய்தியில், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முஸ்லிம் உம்மாவின் மிகப் பெரிய அறிவு ஜீவி இன்றைய தினம் மரணமடைந்து விட்டாரே! என்று குறிப்பிட்டார்கள்.

மர்வான் (ரலி) அவர்கள், ஜைத் பின்தாபித் (ரலி) அவர்களின் ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள். சகாபிகளில் மிகப்பிரபலமான கவிஞர் ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) போன்றவர்கள் இவர் மீது இரங்கற்பாக்களைப் பாடி தங்களின் மனக்கவலைகளை வெளிப்படுத்தினர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களது மார்க்கப்பணிக்கு மறுமையில் உயரிய நற்கூலியை வழங்கிச் சிறப்பிப்பானாக!

இஸ்லாத்தை ஏற்ற முதல் வாலிபரின் வரலாற்றை இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 15ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.