இறை வசனங்களை ஒருங்கிணைத்து குர்ஆன் பிரதிகளை வழங்கிய உத்மான்(ரலி) அவர்கள்! ..ரமலான் சிந்தனை – 13..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

கலீஃபா உத்மான்(ரலி) காலத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு பிரதிகள் எடுக்கும் வேலை முழுவேகத்துடன் தொடங்கியது. ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் பணி துவங்கியது.

கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு “யமாமா” போர் நடந்தது. அதில் திருக்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்த காரிகளும், நன்றாக மனப்பாடம் செய்திருந்த ஹாபிஸ்களும் கலந்து கொண்டனர். அந்த யுத்தத்தில் ஹாபிஸ்களில் 70 பேருக்கு மேல் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து கொண்டனர்.

ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களும் அந்த யுத்தத்தில் காயமடைந்தவர்களில் ஒருவராகும். நபித் தோழர்கள் இந்த யுத்தத்தில் உயிர் நீத்தது உமர் (ரலி) அவர்களை பெரிதும் வாட்டியது.

யமாமா யுத்தம் முடிந்ததும் உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து இது போன்ற யுத்தத்தில் கலந்து எஞ்சிய ஹாபிஸ்கள் யாவரும் உயிர் நீப்பதற்குள் திருக்குர்ஆனை ஒருங்கிணைத்து பாதுகாத்துக் கொள்ளும் பணியை துவக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இம்மாதிரி யுத்தம் நடைபெறும் பட்சத்தில் திருக்குர்ஆன் மனனம் செய்தவர்கள் இல்லாமல் போய் விடுவார்களோ என்ற அச்சம் தெரிவித்தார்.

உமர்(ரலி) அவர்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுத்த கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துக் கூறி திருக்குர்ஆனை தொகுத்து தரும் பொறுப்பை ஏற்கும் படி வேண்டிக் கொண்டார்கள்.

தனது பணி குறித்து ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:- குர்ஆனை பலரிடமிருந்து பெற்று மரப்பட்டைகளிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்கவில்லை, (ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமரிடமும் அதன்பின் அவர்களின் மகள் ஹஃப்ஸாவிடமும் இருந்தது. (அறிவிப்பவர்: ஜைத் பின் ஸாபித்(ரலி) நூல்: புகாரி- 4986)

இஸ்லாம் பல நாடுகளிலும் பரவியபோது ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறையில் குர்ஆனை மக்கள் படித்தார்கள். அதேபோல் குர்ஆனின் வார்த்தைகளை தங்கள் பகுதி உச்சரிப்பின்படி படித்தனர்.

இதனால் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் கூடினால் குர்ஆனை ஓதுவதில் வேறுபாட்டை கண்டனர். ஒவ்வொரு பகுதியினரும் தாங்கள் ஓதுவதே சரியான முறை என்றும் மற்றவர்களுடைய கிராஅத் தவறு என்றும் கூறினர்.

இதனால் பல இடங்களில் குர்ஆனை ஓதுவதில் சர்ச்கைகள் எழுந்தது. ஆகவே ஒரே வித கிராஅத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றினைப்பது அவசியமானது என்பதை தீர்மானித்த உஸ்மான்(ரலி) அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் அதனை செய்தும் முடித்தார்கள்.

கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள் அன்னை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த மூல குர்ஆனைப் பெற்று, ஜைத் பின் தாபித், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஸஈத் பின் அல்ஆஸ், அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் ஆகிய நால்வர் குழுவிடம் அதனைப் பிரதி எடுக்கும் படி உஸ்மான்(ரலி) அவர்கள் பணித்தார்கள்.

அப்போது உத்மான் (ரலி) இந்நால்வரில் குறைஷிகளாகிய பிந்திய மூவரையும் பார்த்து. நீங்கள் குர்ஆனின் ஏதேனும் வார்த்தையை எந்த விதத்தில் எழுதுவது என்று (மதீனாவாசியாகிய) ஜைத் பின் தாபித்தோடு முரண்பட்டீர்களென்றால் அந்தவார்த்தையை குறைஷிகளின் பேச்சு வழக்குப்படியே எழுதுங்கள். ஏனெனில் குர்ஆன் குறைஷிகளின் பேச்சுவழக்கில் தான் இறங்கியது என்றார்கள்.

அதன் படி அவர்கள் நால்வரும் குர்ஆனை பல பிரதிகளாக எழுதி முடித்தபோது மூல குர்ஆனை அன்னை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் உத்மான்(ரலி) திருப்பிக் கொடுத்தார்கள். பிரதி எடுக்கப்பட்டதை எல்லாப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். மேலும் அதற்கு முன்பிருந்த எல்லா குர்ஆன் பிரதிகளையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார்கள். (நூல்: புகாரி 4987)

கலீஃபா உத்மான்(ரலி) அவர்களின் காலத்தில் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆன் தான் இன்று நமது கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஒரே விதமான உச்சரிப்போடு வார்த்தை மாறாமலும் அதன் அர்த்தம் மாறாமலும் நாம் ஓதிக்கொண்டிருப்பதற்கு கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சியே காரணமாகும்.

பெருமானாரின் மறைவுக்கு பிறகு குர்ஆனின் சூராக்கள், வசனங்கள் அரபுலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நபித்தோழர்களிடம் மனனமாகவும், அவரவர் ஓலைச்சுவடிகளிலும் எழுதி பாதுகாத்து வைத்திருந்ததை ஒன்று திரட்டி “முஸ்ஹஃப்” என்னும் ஒரே தொகுப்புக்குள் கொண்டு வந்தவர்கள் ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) அவர்களாகும்.

ஜைது பின் தாபித்(ரலி) அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் அவர்களின் அறம் சார்ந்த பணிகளும் இஸ்லாமிய வரலாற்றில் என்றென்றும் நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் கூறிய நற்சான்றுகளை இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 14ல் காணலாம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.