இறை வசனங்களை ஒருங்கிணைத்து குர்ஆன் பிரதியாக்கிய உத்மான்(ரலி)!..ரமலான் சிந்தனை – 12..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

ஜைத் பின் தாபித் (ரலி) நன்றாக ஓதத் தெரிந்தவர், எழுத்தறிவு உள்ளவர் என்று அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ஜைத் பின் தாபித் (ரலி) ஓதுவதை அண்ணலார் (ஸல்) அவர்கள் செவிமடுத்தார்கள். தெளிவாக ஓதினார், துள்ளியமாக உச்சரித்தார். கற்று உணர்ந்தவர் போல் வசனங்களின் பொருளையும் நன்றாகப் புரிந்து ஓதினார்.

எழுதுவதிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்ததை அண்ணலார் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள். இம்மாதிரி தகுதி கொண்டவர்கள் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்டார்கள். பின்பு அண்ணலார் (ஸல்) அவர்களின் அறிவுரைக்கேற்ப யூதர்களின் மொழியை 15 நாட்களிலும், சிரிய மொழியை 17 நாட்களிலும் கற்றுத் தேர்ந்தார்கள்.

இவ்வாறு நபித்தோழர்கள் மத்தியில் மாபெரும் அறிஞராகவும், அண்ணலார் (ஸல்) அவர்களின் மொழி பெயர்ப்பாசிரியராகவும் விளங்கிய ஜைத் (ரலி) அவர்கள் நம்பிக்கையிலும், நேர்மையிலும் சிறந்து விளங்கினார்கள். இதனால் அண்ணலார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வஹியை (வேத வசனங்களை) எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் நியமித்திருந்தார்கள்.

ஏதேனும் ஒரு வசனம் இறங்கி விட்டால் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களை அழைத்து வரச் சொல்லி அவ்வசனத்தைப் பதிவு செய்வார்கள் பெருமானார். அவ்வப்போது இறங்கிக் கொண்டே இருக்கும் வசனங்களை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். வசனங்கள் இறங்க இறங்க, இறங்கிய மாதிரி அண்ணலார் (ஸல்) அவர்களிடமிருந்து வாயோடு வாயாகக் கேட்டுத் தெரிந்து எழுதினார்கள்.

எந்த வசனம் எப்பொழுது இறங்கியது? ஏன்? எதற்காக இறங்கியது? என்பதெல்லாம் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களுக்குக் கை வந்த கலை. சுருங்கக் கூறின் இவர் ஓர் அறப்போர் வீரர், திருக்குர்ஆனின் நல்லாசிரியர். திருக்குர்ஆனைப் பார்க்காமல் ஓதும் ஹாபிஸ், இனிமையாக ஓதும் காரி, அறிவு ஞானம் மிகுந்த சட்ட மேதை, பல மொழிகள் தெரிந்த பன்மொழிப் புலவர், வஹி எழுதும் எழுத்தாளர், கலீஃபாக்களின் ஆலோசகர்.

கலீஃபா உமர்(ரலி) காலத்திலும், கலீஃபா உத்மான்(ரலி) காலத்திலும் தற்காலிக கலீஃபாவாக செயல்பட்டவர்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் போதெல்லாம் அவருடைய அலுவலகப் பொறுப்பைக் கவனிக்க இவரை தற்காலிக கலீஃபாவாக நியமித்திருக்கிறார்.

சிரியாவுக்கு பயணமான போதும் இவரையே தற்காலிக கலீஃபாவாக உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நியமித்து விட்டுச் சென்றார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த ஜைது பின் தாபித்(ரலி) அவர்களின் தலைமையில் தான் திருக்குர்ஆனை தொகுக்கும் பொறுப்பினை கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள் ஒப்படைக்கிறார்கள்.

திருக்குர்ஆன் ஒரே தடவையில் இறங்கியது அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி 20க்கும் கூடுதலான ஆண்டுகளில் முழுமையடைந்தது. திருக்குர்ஆன் இறங்கும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அக்காலத்தில் காகிதங்களாக அறியப்பட்டிருந்தவற்றில் எழுதச் செய்து பிறகு அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்கச் செய்தார்கள்.

சிலர் திருக்குர்ஆனை தங்கள் நெஞ்சங்களில் மனனம் செய்தும் பாதுகாத்தனர். இவர்களில் எழுதியும், மனனம் செய்தும், பாதுகாத்தவர்களில் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் மிக முக்கியமானவராகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்த போது திருக்குர்ஆன் வெவ்வேறு சுவடிகளில் எழுதப்பட்டும் பலரது நெஞ்சங்களிலும மனனம் செய்யப்பட்டும் பாதுகாக்கப்பட்டது. வசனங்கள் மற்றும் அத்தியாயங்கள் யாவும் தனித்தனியாக இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும் தினச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது. ஒரே ஏட்டில் அனைத்தும் எழுதி வைக்கப்பட்டதாக இருக்கவில்லை

பெருமானார் காலத்தில் ஒரே ஏட்டில் அனைத்தும் எழுதி வைக்கப்பட்டதாக இருக்கவில்லை. அதற்குரிய தேவை அன்று ஏற்படவில்லை. ஏனெனில் வஹி (வேத வெளிப்பாடு) அன்று தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது. அதன் வரத்து அன்று நின்று விடவில்லை.

கலீஃபா அபூபக்கர்(ரலி) காலத்தில் நடைபெற்ற சில யுத்தங்களில் குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த ஹாபிஸ்களான சகாபிகளில் சிலர் ஷஹீதாகிய போதுதான், திருக்குர்ஆன் வசனங்களையும், அத்தியாயங்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் அனைவரிடமும் எழுந்தது.

அதன் நிறைவாகத்தான் கலீஃபா உத்மான்(ரலி) காலத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப்படும் வேலை முழுவேகத்துடன் தொடங்கியது. ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் பணி துவங்கியது.

எவ்வாறு அது முழுமை பெற்றது என்பதை இன்ஷா அல்லாஹ்..

ரமலான் சிந்தனை 13ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.