இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபா உத்மான்(ரலி) வரலாறு!..ரமலான் சிந்தனை- 10..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்கள் தங்களின் இறுதி காலம் (மரணம்) நெருங்குவதை உணர்ந்து உடனடியாக ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து மூன்றாம் கலீஃபாவை தேர்வு செய்யுமாறும் இந்த தேர்வு மூன்று நாட்களுக்குள் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்கள்.

இந்தக் குழுவில் பெருமானாரால் சுவர்க்கவாசிகள் என கூறப்பட்ட உத்மான்(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), சஅது(ரலி), அப்துர்ரஹ்மான்(ரலி), அலி(ரலி) போன்றோர் இடம்பெற்றனர். இவர்களில் அலி(ரலி) அவர்களை தவிர மற்ற ஐவரும் இஸ்லாத்தின் ஆரம்ப கால ஏகத்துவ பரப்புரையாளர்களாகும்.

உமர் (ரலி) அவர்களை நல்லடக்கம் செய்த பின் மிஸ்வர் பின் மஃரமா(ரலி) இல்லத்தில் ஆறு பேரும் தங்கள் முதல் கூட்டத்தைக் கூட்டினார்கள். அக் கூட்டத்தின் பயனாய்ச் சொந்தத்தையோ, வேறெந்த உறவு முறையோ பாராது மக்களின் நல்லதையும், நேர்மையையும், சத்தியத்தையும் மட்டுமே இத்தேர்தலில் மேற்கொள்வதாக வாக்களித்த அப்துர் ரஹ்மான் (ரலி)அவர்கள், மூன்று இரவும் பகலும் மதீனாவில் சஹாபாக்களிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் விருப்பமெல்லாம் அறிந்த பின்னர் முஹாஜிர்கள், அன்ஸார்கள் மற்றும் பிரமுகர்கள் யாவரையும் பள்ளிக்கு அழைத்து, அவர்கள் முகதாவில் உதுமான் (ரலி) அவர்களைப் பார்த்து ‘அல்லாஹ்வை முன்வைத்து, குர்ஆன், பெருமானாரின் முன்மாதிரி, இரு ஆன்றோர்களாகிய அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியவர்களின் அடிச்சுவடு இவைகளைப் பின்பற்றி நடப்பதாய் வாக்களியுங்கள்’ என்றார்கள்.

அப்படியே வாக்களித்தபின் எல்லோரும் உத்மான் (ரலி) அவர்களை கலீபாவாகத் தெரிந்தெடுத்து அவர்கள் கரத்தில் உறுதிமொழி செய்தார்கள். உத்மான் (ரலி) அவர்களின் கிலாஃபத்தின் துவக்கம் கி.பி. 644ம் வருடம் ஹிஜ்ரி 24 முஹர்ரம் முதல் தேதியாகும்.

உத்மான்(ரலி) அவர்கள் இயற்கையாகவே அமைதியான குணமுடையவர்களாக உள்ளவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள், அதிகம் வெட்கப்படக் கூடியவர்கள், அல்லாஹ்வின் தண்டனைக்கு அதிகம் பயந்தவர்கள் இப்படி ஒரு நல்ல மனிதனுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் அனைத்தும் இருந்துள்ளது.

மேற்சொன்ன நற்குணங்களுக்கு மட்டுமல்ல, ஒரு தயாள குணமுடையவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் ஏராளம் காணலாம். மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் வந்த பிறகு மதீனாவில் முஸ்லீம்களுக்கு தண்ணீர் தேவை என்றால் யூதர்களை நம்பியே இருந்தார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம் “யூதர்களிடம் இருக்கும் பிரசித்திப்பெற்ற பிஃரூமா என்னும் இந்த குடிநீர் கிணற்றை விலைக்கு வாங்கி தருபவர்கள் யார்? இந்த உதவி செய்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மிகப்பெரிய நதியை தருவான்” என்று கூறினார்கள்.

உடனே உத்மான்(ரலி) அவர்கள் தன்னிடம் இருந்த 20,000 தங்க தினார்கள் நபி(ஸல்) அவர்களிடம் தந்து யூதர்களிடம் அந்த தண்ணீர் கிணற்றை வாங்கினார்கள். அந்த கிணற்றிற்கு பெயர் உத்மான் என்று அழைக்கப்பட்டது. இன்றும் கூட இந்த பிஃரூமா கிணற்றை மதீனாவில் காணலாம்.

தயாள குணம் கொண்ட உத்மான்(ரலி) அவர்களின் பொருளாதாரம் இஸ்லாமிய வளர்ச்சிக்காக வாரி வாரி வழங்குவது ஆரம்பமானது. இஸ்லாத்திற்காக பொருளுதவி செய்வதில் உத்மான்(ரலி) அவர்கள் மற்ற நபித்தோழர்களுக்கு முன் மாதிரியாகவும் வாழ்ந்துள்ளார்கள் என்று சொன்னால் மிகையில்லை.

மதீனாவில் இஸ்லாம் வளர்ந்தது, மஸ்ஜித் நபவியை விரிவாக்கம் செய்ய விரும்பினார்கள் நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுடைய பள்ளிக்காக அதற்காக உதவி செய்பவர்கள் யார்? என்று வினவினார்கள், உடனே கொடைவள்ளல் உத்மான்(ரலி) அவர்கள் தன்னிடமிருந்த சொத்துக்களை கொடுத்து மஸ்ஜித் நபவி விரிவாக்கத்துக்கு பேருதவி செய்தார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் கடினமான போர் என்று வர்ணிக்கப்பட்ட தபுக் போருக்காக நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களிடம் உதவி கோரினார்கள். அந்த சமயம் முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாக இருந்தார்கள், அப்போதும்கூட உத்மான்(ரலி) அவர்கள் தன்னிடமிருந்த ஆயிரம் தங்க பொற்காசுகளை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்காக வாரி வழங்கினார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த கொடைவள்ளல் உத்மான்(ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தமது கொடைத்தன்மையையும் மக்கள் நல சமூக பணியையும் அதிக ஆர்வத்துடன் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இவர்களது ஆட்சியில் மக்கா, மதீனா பள்ளிகள் புனரமைப்பு செய்யப்பட்ட விதமும் அல்குர்ஆன் வசனங்களை ஒன்று திரட்டிய விதமும் இன்றும் கூட வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 11ல் பார்க்கலாம்.

கீழை ஜஹாங்கீர் அரூஸி.