அபூபக்கர்(ரலி) அவர்களை அல் காரினைன் என ஏன் அழைக்கப்பட்டது? ..ரமலான் சிந்தனை – 9.. கீழை ஜஹாங்கீர் அரூஸி.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில், அதாவது வயது வந்தோர்களில் முதலாவது நபராகும்.

எப்பொழுது இஸ்லாத்தை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அப்போதிருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அவர்களது வாழ்க்கை முழுவதுமே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக மாசு மறுவில்லாமல் தன்னையே இழந்த சரித்திரச் சான்றுகளைத் தான் நாம் காண முடியும்.

இன்னும் ஹஸ்ரத் உதுமான் (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) போன்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸாபிக்கூன் அவ்வலூன் என்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முன்னோடிகளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவராக கணிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்களது அப்பழுக்கில்லாத தியாக வாழ்வு தான் என்றால் அதில் மிகையில்லை.

இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமைக்காக ஏகப்பட்ட அடிமை முஸ்லிம்கள், அவர்களது எஜமானர்களால் துன்புறுத்தப்பட்ட பொழுது அந்தக் கொடுமையைச் சகிக்காது தன்னுடைய சொந்த செல்வத்தைக் கொடுத்து, அந்த அடிமை வாழ்வு வாழ்ந்த முஸ்லிம்களை விடுதலை செய்த பண்பாளராக அபுபக்கர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அண்ணலாரை மனமுவந்து ஏற்றுக்கொண்ட அபூபக்கர்(ரலி) அவர்களும் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) இருவரும் இணைந்து தமது பனீதைம் குலத்தாரின் மற்ற மக்களிடமும் ஏகத்துவத்தின் பால் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட குறைஷியர் குலத்தின் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட நவ்ஃபல் இப்னு குவைலிது என்பவர் அபூபக்கர்(ரலி), தல்ஹா(ரலி) இருவரையும் பிடித்து இழுத்து வரச்செய்து இருவரையும் ஒரே கயிற்றால் கட்டிப்போட்டு அடித்து வதைக்க ஆரம்பித்தார்.

இதை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பனீதைம் கோத்திரத்தார் உள்ளிட்ட யாருமே இவர்களை விடுவிக்க முன்வரவில்லை. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் இருவரும் “முதன் முதல் இஸ்லாத்திற்காக, துன்பம் அனுபவித்த இரண்டு வீரர்கள்” (அல் காரினைன்) என்று அழைக்கப்பெறுகின்றனர்.

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை தங்களின் உயர்வான தலைவராக மதிக்கப்பட்ட அபூபக்கர்(ரலி) அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக தூக்கி எறிந்து விட்டனர் மக்கத்து குறைஷியர்கள்.

பெரும் செல்வந்தரான அபூபக்கர்(ரலி) அவர்களும் தல்ஹா(ரலி) அவர்களும் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டு வீதிகளில் வருவோர் போவோரெல்லாம் பார்த்து எள்ளி நகையாடிய அந்த நிகழ்வினை நம்மோடு வாழும் இன்றைய செல்வந்தர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தம்மிடம் இருக்கும் தங்கம்,வெள்ளி, மாடமாளிகை, சொத்து சுகம், வாகனம் எல்லாமே தாம் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தின் கொள்கைக்கு முன்பு ஒன்றுமே இல்லை என்பதைத்தான் அல்காரினைன் என்று அழைக்கப்பெறும் அபூபக்கர்(ரலி) அவர்களும் தல்ஹா(ரலி) அவர்களும் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

இப்படிப்பட்ட தியாக சிந்தனைகள் இன்றைய நமது செல்வந்தர்களிடம் இருக்கிறதானு கேட்கவில்லை? இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். ஈந்துவக்கும் ஈகைப்பணியில் தமது செல்வம் அனைத்தையும் அர்ப்பணித்த அன்னை ஹதீஜா பிராட்டியார், அபூபக்கர்(ரலி), ஹழ்ரத் உத்மான்(ரலி) போன்றவர்களின் தியாக வாழ்க்கை நாம் ஒவ்வொருவரும் கற்று உணர வேண்டிய பாடமாகும்.

அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆரம்ப கால ஏகத்துவ பரப்புரையின் மூலம் ஈர்க்கப்பட்ட மிக முக்கிய ஐந்து நபர்களான உத்மான் இப்னு அஃப்பான்(ரலி), ஜுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), சஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) குறிப்பிடத்தக்கவர்களாகும்.

இந்த ஐந்து நபர்களும் பெருமானாரின் கொள்கைகளை ஏற்று அவர்களின் சீரிய வழிகாட்டலில் தங்களை முழுமையாக இணைத்துக்கொண்ட பின்னர் தொடக்க கால இஸ்லாமிய பிரச்சாரகர்களாகினர். இந்த ஐந்து நபர்களின் தீவிர ஏகத்துவ பரப்புரையின் மூலம் சுமார் ஐம்பது நபர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.

அபூபக்கர்(ரலி) அவர்களின் ஏகத்துவ பரப்புரையில் தன்னை இணைத்துக்கொண்ட முதல் ஐந்து நபர்களில் ஒருவர் ஹழ்ரத் உத்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களும் ஒருவராகும்.

உமையா கோத்திரத்தின் மிகப்பெரும் செல்வந்தரான ஹழ்ரத் உத்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் தமது செல்வம் அனைத்தையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்கள்.

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபாவான உத்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள், தங்களின் இறுதி காலத்தில் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி பல நாட்கள் துன்புறுத்தப்பட்ட நிலை குறித்து இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 10ல் காணலாம்…

கீழை ஜஹாங்கீர் அரூஸி.