திருக்குர்ஆன் வசனத்தை செவிமடுத்த உமர்(ரலி) அவர்களின் மாபெரும் பிம்பம்! – ரமலான் சிந்தனை – 7..

இஸ்லாத்தை அல்லாஹ் தனது இறுதி நபியாம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக முழுமைப் படுத்துகிறான், நபிகளாரும் தம் இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு இறுதிப் பேருரையும் நிகழ்த்தி விடுகிறார்கள்.

காலங்கள் செல்கின்றன, இஸ்லாம் அழகாக மலரும் காலத்தில் எதிர்பாராத விதமாக அரபுச் சக்கரவர்த்தியும் இறுதி நபியுமாகிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 11-ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 9 அல்லது 12 திங்கட் கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் இம் மண்ணுலகை விட்டு பிரிகிறார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

இஸ்லாம் தன்னுடைய கண்ணியமிக்க தலைமைத்துவத்தை இழந்து தவிக்கும் சூழல் கண்டு உமர்(ரலி) அவர்கள் துவண்டுவிடுகிறார்கள்! இஸ்லாம் எனும் அழகிய கோட்டை தகர்ந்து விடக்கூடாது,  அதிகார போட்டியால் தலைமைத்துவத்திற்கு புரட்சி வெடித்து விடக்கூடாது என்று கருதிய உமர் பின் கத்தாப் (ரலி) சற்றும் தாமதிக்காமல் சீரிய முடிவு ஒன்றை எடுக்கிறார்கள்.

விளைவு இஸ்லாத்தின் முதல் கலீஃபாவாக அபூபக்கர் (ரலி) அவர்களை பிரகடனப்படுத்தப்படுதல். தலைமைத்துவத்தை தாங்கிப்பிடிக்க இஸ்லாம் எனும் கோட்டைக்கு தூணாக தம்மை சமர்ப்பித்து சக தோழர்களுடன் தோளோடு தோள் கொடுத்து சங்கை மிகு அபூபக்கர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் முதல் கலீஃபாவாக முன்மொழிந்த பாக்கியத்திற்கு சொந்தக்காரர் உமர் (ரலி) ஆவார்கள்.

குழப்பமான காலகட்டத்தில் தெளிவான முடிவை எடுப்பவர்களில் முதன்மையானவர் அமீருல் முஃமினீன் உமர் (ரலி) எனும்போது ஈமான் கொண்ட நெஞ்சங்கள் சந்தோஷத்தில் தத்தளிப்பதை நேரில் பார்ப்பது போன்று தோன்றுகிறது நம் உள்ளத்தில்!

உயரிய கலீஃபா பதவிக்கு ஆசைப்படாதவருக்கு கிடைத்த கண்ணியம்! உமர் (ரலி) அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பதவியேற்ற இஸ்லாத்தின் கண்ணியமிக்க முதலாம் கலீஃபா அபூபக்கர்(ரலி) வெற்றிமிக்க தலைவராக விளங்கினார்கள். ஆனால் இரண்டே ஆண்டுகள் ஆட்சிப் புரிந்து சுகவீனப்படுகிறார்கள்.

எனினும் கண்ணியமிக்க முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) தாம் மரணிக்கும் தருவாயில் தம் சக தோழர்களுடன் ஆலோசணை மேற்கொண்டு குழப்பமான காலகட்டத்தில் தெளிவான முடிவை எடுப்பவர்களில் சிறந்தவரும் அமீருல் முஃமினீனுமாகிய உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களை கலீஃபாவாக முன்மொழிந்துவிட்டு மரணிக்கிறார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…இங்கு ஆச்சரியம் என்னவெனில்? முதலாம் கலீஃபாவை தேர்ந்தெடுத்த பாக்கியம் இரண்டாம் கலீஃபாவுக்கும் இரண்டாம் கலீஃபாவை தேர்ந்தெடுத்த பாக்கியம் முதலாம் கலீஃபாவுக்கும் என்பதேயாகும்.

இந்த பாக்கியம் அரபுலகச் சக்கரவர்த்தி முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றியதால் கிடைத்ததாகவே கருதப்படுகிறது.

அதன்படி அமீருல் முஃமினீன் உமர் பின் கத்தாப் (ரலி)அவர்கள் ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல்ஆகிர் 23ம் நாள் இரண்டாம் கலீஃபாவாக பதவியேற்றார்கள். உமர் (ரலி) ஆட்சிக் காலம் பொற்காலம் என இன்றும் வர்ணிக்கப்படுகிறது.

கூஃபா, பஸரா உள்ளிட்ட நகரங்களை நிர்மாணித்தார்கள். அனைத்து நகரங்களிலும் நீதிபதி (காஜி‌‌‌‌‌‌‌)களை இவர்களே முதன்முதலில் நியமித்தார்கள். கடிதங்களை எடுத்துச்செல்ல உதவியாக அஞ்சலகங்களை ஏற்படுத்தினார்கள். ஹிஜ்ரி 18-ல் பாரசீகர்களின் நாணய வடிவில் நாணயங்களை வெளியிட்டார்கள்.

இவர்களின் ஆட்சியில் வேத வசனங்கள் மறைச் சட்டங்கள் முழு மலர்ச்சி பெற்றன.  சாதி, மதம், பேதமின்றி அனைத்து மக்களும் இறைநீதியின் நிழலில் நிம்மதியான வாழ்வை அனுபவித்தனர். இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும்  போது ஆட்சியாளர்கள் ஏதேனும் தவறு செய்தால், துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு உமர் (ரலி) ஒரு முக்கியக் காரணியாக விளங்கினார்கள்.

அண்ணலாரின் மறைவுக்குப் பின்னர் தாமதமின்றி முதல் கலீஃபாவாக ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களை உமர்(ரலி) அவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்கு அபூபக்கர்(ரலி) அவர்களின் வரலாற்று பின்னணி குறித்து இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 8ல் பார்க்கலாம்!
கீழை ஜஹாங்கீர் அரூஸி.