கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதா?-வைகோ கண்டனம்..

கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதா?-வைகோ கண்டனம்..

அரியானா மத்தியப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில், பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி), கொரோனா பேரிடரால் தள்ளி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளைத் தொடங்குவது குறித்தும், அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்களைத் தொடங்குவது குறித்தும் ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.

இக்குழு அளித்திருக்கும் பரிந்துரைகளில், மருத்துவப் படிப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) போன்று, கலை அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்பதும் இடம்பெற்று இருக்கிறது.

இதே கருத்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் முன்வைத்தபோது, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. நானும் கண்டித்து அறிக்கை தந்தேன்.

கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கிப் போடும் வகையில், நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வது அநீதியாகும். இது கண்டனத்துக்கு உரியது.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் பயிலும் வாய்ப்பற்ற பின்தங்கிய, பட்டியல் இனச் சமூக மாணவர்கள் மற்றும் அனைத்துச் சமூகங்களையும் சார்ந்த மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளைத்தான் நம்பி உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் நுழைவுத் தேர்வைப் புகுத்துவது சமூக நீதிக்கும் எதிரானது ஆகும்.

எனவே மத்திய பா.ஜ.க. அரசு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தச் செய்யப்பட்டு இருக்கும் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க ‘தாயகம்’ சென்னை – 8 30.04.2020

புனித ரமலான் வாழ்த்துக்கள்..