சகோதரியின் குரல்வளத்தில் குர்ஆன் வசனங்களை கேட்டு மாபெரும் சகாபியான வரலாறு!- ரமலான் சிந்தனை – 6..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் (ரலி) அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமர் (ரலி) இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான “அதீ” என்ற குலத்தை சேர்ந்த கந்தமா மற்றும் கத்தாப் ஆகியோரது மகனாகவும் தாய்மாமன் உறவில் அபூ ஜஹ்ல்-உடனும் இருந்த உமர் பின் கத்தாப் எந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீதும் பெருமானார் மீதும் பகைமை உணர்வோடு இருந்திருக்க வேண்டும்? என்று சிந்தித்துப் பாருங்கள்!

ஒருநாள் இறைத்தூதர் என்று கூறிக்கொண்டு ஏக இறைக் கொள்கையை எத்திவைக்கும் முஹம்மது என்ற மனிதரை கொல்ல வேண்டும் என்ற துடிப்புடன் தன் கூர்மையான வாளை உருவியவாறு வாளும் கையுமாக வீட்டை விட்டு வெளியேறியனார் உமர்!

வழியில் நுஐம் (ரலி) என்பவர் இடை மறிக்கவே முஹம்மதைக் கொன்று விட்டு, கஃபாவில் உள்ள நமது கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கப் போகிறேன் என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் உமர்.

அண்ணலாருக்கு ஏற்படப்போகும் விபரீதத்தை உணர்ந்து கொண்ட நுஐம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உமரின் மனதை திசை திருப்ப நாடி உன் சகோதரியும், மைத்துனரும் நீங்கள் கொல்லப்போகும் முஹம்மது அவர்களின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகி விட்டார்கள். அவர்கள் இந்நேரம் குர்ஆன் வசனங்களை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம்? அவர்களைப் போய் முதலில் கவனியும் என்று நல்லறிவு கூறுகிறார்.

இதை சற்றும் எதிர்பாராத உமர் நெருப்பின் தனலைப் போன்ற ஆத்திரத்துடன் தங்கையின் வீட்டை நோக்கி மின்னலெனப் பாய்கிறார். அங்கு குர்ஆனின் வசனங்களை முனுமுனுத்துக் கொண்டிருப்பதை நின்று கவனித்துக் கேட்கிறார்.

பின்னர் கோபம் குறையாத நிலையில் மைத்துனரின் சட்டையைப் பிடித்து நமது முன்னோர்கள் மற்றும் மூதாதையர்கள் மார்க்கத்தை வெறுத்து விட்டீரே! என்று மிரட்டல் விட, நாங்கள் சத்தியத்திற்காக அசத்தியத்தைத் தூர எறிந்தோம் என்று அழகிய முறையில் கம்பீர குரலில் பதிலளிக்கிறார் உமரின் மைத்துனர் ஸயீத் (ரலி) அவர்கள்.

இதைக் கேட்டவுடன் உமரின் கண்களில் எரிமலை குழம்பு வெடித்தது போன்று ஆத்திரமடைகின்றது கோபம் தலைக்கேறுகிறது அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ? என்று உன்னிப்பாக கவனித்த தங்கை ஃபாத்திமா (ரலி) அவர்கள் உமருக்கும் தன் கணவருக்கும் இடையில் திரையாக வந்து நின்றுவிடுகிறார், பின்னர் என் கணவரை விட்டுவிடும் எனது கணவர் மீது கை வைப்பது சரியல்ல என்று எச்சரிக்கிறார்.

மேலும் நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம். இதற்காக நீர் என்னையும் என் கணவரையும் கொலை செய்ய வந்திருப்பீரென்றால்? தாராளமாக தயவு தாட்சணியமின்றி எங்களைக் கொன்று விடுங்கள். ஏனெனில், சத்தியத்தை ஏற்றவர்கள் எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதுமில்லை அடிபணிவதுமில்லை என்று பதிலளிக்கிறார்.

எரிமலையாக வெடித்த கோபம் அன்புத் தங்கையின் மென்மையான குரலுக்கு அடிபணிகிறது. சற்றே மனம் தடுமாறுகிறது தன்னை சுதாரித்துக் கொள்கிறார். பிறகு அங்கு கண்ணீர் சிந்தும் அன்புத் தங்கையிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்து நான் வரும் போது இங்கே ஓதிக் கொண்டிருந்த முஹம்மது என்ற அந்த மனிதர் கொடுத்த குர்ஆன் வசன ஓலையை என்னிடம் காண்பியுங்கள் என்றார் உமர்!

அன்புத் தங்கையும் மைத்துனரும் தங்களிடமிருந்த அரிய பொக்கிஷமான அல்குர்ஆனின் அத்தியாயம் தாஹா எழுதப்பட்ட ஓலையை கொடுக்கிறார்கள். முதல் முறையாக அந்த வசனத்தை ஓத ஆரம்பிக்கிறார் கல் நெஞ்சம் கரைகிறது. உள்ளம் பிரகாசிக்கிறது உடனே சற்றும் யோசிக்காமல் மின்னலாய் ஸஃபா குன்றினை நோக்கி அதாவது தாருல் அர்க்கம் நோக்கி மாமன்னர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்திக்க செல்கிறார் உமர்.

முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்ய கூரிய உடைவாளுடன் சென்ற உமரின் கைகளை நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது திருக்கரங்களை நீட்டுகிறார்கள் உமரோ சற்றும் சிந்திக்காமல் தனது கரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில் வைத்து, ”வணக்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.(அல்லாஹு அக்பர்)

இஸ்லாத்தை ஏற்ற உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற உயிர்த் தோழராக மாறுகிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் தம்மை மார்க்கத்திற்காக அர்ப்பணித்து வாழ்கிறார். அவர் எந்தளவுக்கு மார்க்கத்திற்காக உழைத்தார் என்பதை இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளால் நாம் புரிந்து கொள்ளலாம்.

‘நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு ‘மார்க்கம்’ ‘என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்”. (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி), நூல்:புகாரி)

இஸ்லாத்தின் மீது அளவு கடந்து பிரியமும் கவலையும் கொண்டவர்களாக திகழ்ந்த உமர்(ரலி) அவர்கள் அண்ணலாரின் பிரியமான நபித்தோழராய் திகழ்ந்தது மட்டுமல்ல, மாபெரும் கலீஃபாவாகவும் உயர்ந்தார்கள். அவர்களின் மாபெரும் பிம்பத்தை இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 7ல் பார்ப்போம்.

கீழை ஜஹாங்கீர் அரூஸி.