ஜின்களுக்கும் அச்சமூட்டிய தித்திக்கும் திருக்குர்ஆன்… ரமலான் சிந்தனை – 5, கீழை ஜஹாங்கீர் அரூஸி.

தாயிஃப் அருகே உள்ள “நக்லா”(Nakhlah) என்னும் மலைப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்த நபிகளார் தொழுகை நேரத்தில் தித்திக்கும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிய போது அவர்களின் இனிமையான குரல் வளம் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த மலைப்பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது.

உடனிருந்த ஜைது(ரலி) அவர்களைத் தவிர மனித நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் நபியவர்கள் ஓதிய இறை வசனங்களை “ஜின்”கள் கேட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டன. இதனை நபியவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அல்லாஹ் தன் தூதருக்கு அருளிய வேத வசனங்களில் அதை குறிப்பிட்டு பெருமானாருக்கு உணர்த்துகிறான்.

(நபியே!) இந்தக் குர்ஆனை கேட்கும் பொருட்டு ஜின்களுள் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்தோம். அவர்கள் அங்கு வந்தபோது, (தம் இனத்தாரிடம்) “வாய் பொத்திக் கேளுங்கள்” எனக்கூறினர். (நீர் ஓதி) முடித்த பின்னர், தங்கள் இனத்தவர்களிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யத் தொடங்கினர்.

அவர்கள் கூறினர், எம் இனத்தாரே! திண்ணமாக நாங்கள் ஒரு வேதத்தைக் கேட்டோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பெற்றதாகும். தனக்கு முன்னர் அருளப்பெற்ற வேதங்களை உண்மைப்படுத்துவதாகும்.(நம்மை) உண்மையின்பாலும் நேரான வழியின்பாலும் செலுத்தக் கூடியதாகும்.

எம் இனத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்குச் செவி சாய்ப்பீர்களாக! அவரை நம்புங்கள். அதனால் உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னித்துத் துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.(அல் அஹ்காஃப்: 29-31)

அல்லாஹ்வின் படைப்பினங்களுள் உயர்ந்தது மனிதப் படைப்பு(அல்குர்ஆன் – 95:4) மனிதனுக்கு அப்பாற்பட்ட தவறிழைக்கும் இயல்புடைய இன்னொரு படைப்பையும் அல்லாஹ் படைத்துள்ளான். அதுவே “ஜின்” என்ற படைப்பு. மனித இனத்தின் எதிரியான ஷைத்தானும் இவ்வினத்தைச் சார்ந்தவனே.

மனித-ஜின் இனங்களைப் படைத்ததன் நோக்கம் பற்றி கூறும் போது, “ஜின் மற்றும் மனித இனத்தவரை என்னை வணங்கி எனக்கு கட்டுப்படுவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை”(அல்குர்ஆன் – 51:56) என்று வல்ல இறைவன் தன் வான்மறையில் அருளியுள்ளான்.

ஏனெனில், இறைவனுக்குக் கட்டுப்படுவதில் தவறிழைக்கும் இயல்பைச் சுமந்திருப்பதால், இவ்விரு இனத்தவரையும் படைத்ததன் நோக்கம், தன்னை வணங்கிக் கட்டுப்படுவதுதான் என்று இறைவன் இங்கே சுட்டிக் காட்டுகிறான்.

மனித இனத்தில் எப்படி நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்களோ, அதே போன்று ஜின் இனத்தவரிடமும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பர் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றாகும்.

மனிதர்களும் ஜின்களும் தீயவர்களாக மாறுவது, இவுலகத்தின் மாயைகளால்தான் என்பதை அருள்மறை குர்ஆன் ஆணித்தரமாக கூறுகின்றது. இறைத்தூதர்கள் வந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருந்தும், வழி தவறி சென்ற மனிதர்களும் ஜின்களும் மறுமை நாளில் ஒன்று கூட்டப்படுவார்கள்.

அப்போது “ஜின், மனிதக் கூட்டத்தாரே! உங்களில் தோன்றிய என் தூதர்கள் உங்களிடம் வந்து, எனது வசனங்களை ஓதிக் காண்பித்து, நீங்கள் என்னைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றி உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கவில்லையா?” (என இறைவன் கேட்பான்) அதற்கவர்கள், “ஆம்; நாங்கள் எமது வாழ்வில் (அவர்களைச்) சந்தித்தோம். ஆனால், உலக வாழ்க்கை எங்களை மயக்கிவிட்டது.” என்று தாம் மாறு செய்தது பற்றி, தமக்கு எதிராகத் தாமே சாட்சியம் கூறுவர்.(அல்குர்ஆன் – 6:130)

நபியவர்களைப் பின்பற்றுவது, நபியவர்களுக்கு அருளப்பெற்ற வேத வசனங்களைக் கேட்டறிவது, மனித – ஜின் இரு இனத்தவருக்கும் பொதுவானதாகும். இவ்வடிப்படையில் தான், நபியவர்கள் திருமறை ஓதியதை நக்லாப் பள்ளத்தாக்கில் ஜின்கள் நின்று கேட்டு, நபியை நம்பிக்கை கொண்டதாக தித்திக்கும் திருகுர்ஆன் கூறுகிறது.

ஜின்களையும் நேர்வழிப்படுத்திய அல்குர்ஆனை இந்த புனிதமான ரமலான் காலத்தில் அதிகம் ஓதுங்கள், ஒரு சகோதரியின் இனிமையான குரல்வளத்தில் ஓதப்பெற்ற குர்ஆன் வசனங்களை கேட்டு மாபெரும் சகாபியான வரலாறும் உண்டு.

இன்ஷா அல்லாஹ்….  ரமலான் சிந்தனை 6ல் காண்போம். கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..