ஜின்களுக்கும் அச்சமூட்டிய தித்திக்கும் திருக்குர் ஆன்!, ரமலான் சிந்தனை – 4 – கீழை ஜஹாங்கீர் அரூஸி…

நபியவர்களின் ஏகத்துவ பரப்புரையின் ஆரம்ப காலக்கட்டத்தில் தாயிஃப் சென்று அங்கே ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைத்தார்கள். ஒரு மாத காலம் அங்கே தங்கியிருந்தும் அம்மக்கள் பெருமானாரின் தூது செய்தியை காது கொடுத்து கேட்காமல் ஏளனம் செய்வதும் தாக்குவதுமாய் அழிச்சாட்டியம் செய்தனர் தாயிஃப்வாசிகள்.

அன்னை ஆயிஷா பிராட்டியார் ஒருமுறை பெருமானாரிடம் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! உஹதுப்போரின் போது உங்களுக்கு ஏற்பட்ட வேதனைப் போன்று வேறு ஏதேனும் உங்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளதா?

“ஆம்; உன் கூட்டத்தினர் எனக்கு கொடுத்த தொல்லைப் போன்று வேறொன்றை நான் கண்டிருக்கவில்லை. மிகவும் மோசமான பாதிப்பு அந்த மலைப்பகுதியில் (அகபா-தாயிஃப்) எனக்கு ஏற்பட்டது தான். அந்த மக்களிடம் எனது தூதுச்செய்தியை எடுத்துரைத்தபோது, அவர்கள் என்னைப் புறக்கணித்தனர்.

அவர்களின் புறக்கணிப்பும் அவர்கள் என் மீது நடத்திய தாக்குதல்களும் ஒரு கட்டத்தில் இரு மலைகளையும் ஒன்று சேர்த்து அம்மக்களை அழித்து விடவா? என மலைகளின் மலக்கு என்னிடம் கேட்கும் நிலையை அல்லாஹ் உண்டாக்கி வைத்தான்.

நான் அதை மறுத்து இந்த மக்கள் இல்லாவிட்டாலும், இவர்களின் சந்ததியினராவது அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காமல் இருக்கட்டும் என வானவர் கோமான் ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் சொல்லிவிட்டேன் என்றனர் பெருமானார் அவர்கள்.

கல்லடியாலும் கடும் சொல்லடியாலும் தாம் நோவினைப்படுத்தப்பட்ட நிலையிலும் தாயிஃப்வாசிகளை மன்னித்த மனிதாபிமானம் பெருமானாருக்கு மட்டுமே சாத்தியமாயிற்று; தற்போது இந்த இடம் தான் மக்காவுக்கு ஹஜ்-உம்ரா நாட்டத்துடன் கிழக்குப் பகுதியிலிருந்து வருவோருக்குரிய “மீக்காத்” எனும் “இஹ்ராம்” கட்டும் எல்லையாக அமைந்துள்ளது.(புகாரி:3231,முஸ்லிம்:1795)

தாயிஃப்வாசிகளின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அங்கிருந்து ஜைது(ரலி) அவர்களுடன் புறப்பட்டு கரடு முரடான மலைகளைக் கடந்து மக்கா நோக்கி பயணப்பட்டனர் பெருமானார்(ஸல்) அவர்கள்; வரும் வழியில் “நக்லா”(Nakhlah)என்ற மலைக் கணவாயில் சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்தார்கள்.

அங்கே இருந்த நாட்களில் அதுவரை தமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட விதத்தில் தொழுகைகளைத் தொழுது, அவற்றில் அதுவரை அருளப்பட்டிருந்த இறை வசனங்களை ஓதினார்கள்.

உடனிருந்த ஜைது(ரலி) அவரக்ளைத் தவிர மனித நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் நபியவர்கள் ஓதிய இறை வசனங்களை “ஜின்” கள் கேட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டன. இதனை நபியவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அல்லாஹ் தன் தூதருக்கு அருளிய வேத வசனங்களில் அதை குறிப்பிட்டு பெருமானாருக்கு உணர்த்துகிறான்.

பெருமானாரின் இனிமையான குரலில் ஓதப்பட்ட இறைவசனங்கள் காற்றில் கலந்து ஜின்களை ஈர்த்த விசயத்தை இன்ஷா அல்லாஹ்…ரமலான் சிந்தனை தொடர் 5ல் பார்ப்போம்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..