உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் அரசு மற்றும் தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. அரசு புறம்போக்கு நிலங்கள் நீங்கலாக தனியார் பட்டா விளைநிலங்களையும் கையகப்படுத்த நில அளவீடு செய்துள்ளது.

இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்நத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் துவங்கியது. வழக்கு நிலுவையில் உள்ளதால் நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தக் கோரி ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் நாகனேந்தல், வளமாவூர் பகுதி அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் முறையிட்டனர்.

இது குறித்து நாகனேந்தல் விவசாயிகள் மதிவாணன், பிரபாகரன் கூறுகையில், உப்பூர் அனல்மின் உற்பத்தி திட்டத்திற்காக ஆர் எஸ் மங்கலம் ஒன்றியத்தில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்தும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். மேலும் உயர் நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வரும் வரை நிலம் கையகப்படுத்துவதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற விவசாயிகள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாகும் என்றனர்.