பயணம் – 5, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை.

முன்னுரை:-

பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது.  உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் ஆசிரியரை  9443440950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கட்டுரை தொடர்கிறது..

நீர்வீழ்ச்சிகள் கவர்ச்சிகரமானது. நீர்வீழ்ச்சிகளை கண்டு குளிக்காதவர்கள் ரசிக்காதவர்கள் எதையோ இழந்து விடுகிறார்கள். குற்றாலம் என்பது குளிர்நீரின் முகவரி. வயதுவித்தியாசங்கள் இல்லாமல் ஆண்களும்,  பெண்களும் குளித்து ரசிக்கும் இடம்.  குற்றாலத்தின் மூல ஆறு பல மலைப்பாதைகளில் பலவகை செடிகளை கடந்து மருத்துவ குணமிக்க நீராக கொட்டுகிறது.

தலைகொடுக்க தயங்குபவர்கள சில்லென்று நீர்பட்டு உடல்சூடு தணிந்ததும் குளித்து கொண்டே இருக்கிறார்கள். வெளியில் வர மனமில்லாமல் குளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  பழையகுற்றால அருவி உயரமானது. அதிலிருந்து கொட்டும் நீரும் மிகவேகமானது.  பிரதான அருவி (Main falls) கடை வீதியிலேயே இருப்பதால் யாரும் நடந்துபோயே குளித்துவிடலாம்.

ஐந்தருவி ஐந்து கிளைகளாக கொட்டுகிறது. மூன்று ஆண்கள் பகுதியிலும் இரண்டு பெண்கள் பகுதியிலும் விழுகிறது.  பழதோட்ட அருவி, புலி அருவி,  பால்அருவி, என்று நிறைய அருவிகள் இருந்தாலும்  மூன்று அருவிகளே பிரதானமானது.

ஏராளமான மருத்துவ குணமிக்க மரங்களாலும், செடிகளாலும் சூழப்பட்டிருக்கிற  குற்றாலம் சிறப்பானது. மலைக் குகைகளிலும், உயர்ந்த மலைப் பகுதிகளிலும்  இப்போதும் சித்தர்கள் வசிக்கிறார்கள்.

கேரளமாநிலம் முழுக்க மலைகளாலும் பசுமையாலும் சூழப்பட்டுள்ளது. இதில் வயநாடு பகுதி  முழுக்க ஏராளமான சுற்றுலாபகுதிகள் உள்ளன.  எடக்கல் குகை என்ற ஒருகுகை ஆச்சரியமானது. ஏராளமான படிகளின் மேல் ஏறிச் சென்று ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் ஏறக்குறைய செங்குத்தாக ஏறி அந்த மலையின் உச்சிப்பரப்பை அடைய வேண்டும். உச்சியிலிருந்து சிறிது கீழிறங்கினால் குகை ஒன்று உள்ளது. ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே அந்த குகையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அத்தாட்சிகளும் பதிவுகளும் உள்ளன.

மொழியின் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் மனிதர்கள் தங்கள் சொல்வதை வெளிப்படுத்த சைகைகளை செய்து வெளிப்படுத்தினார்கள். பிறகு சித்திரங்களை வரைந்து தங்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்தினார்கள். பிறகு மொழியும் எழுத்தும் உருவானபோது  எழுத்துக்களை எழுதி வெளிப்படுத்தினார்கள்.

எடக்கல் குகையில் ஏறக்குறைய 20 அடி உயரத்தில் தமிழால் பாறையில் கூர்மையான பொருளை வைத்து கீறி எழுதி இருக்கிறார்கள்.  ஏறுவதற்கு எந்த உயரமான வசதிகளும் இல்லாத இடத்தில் எப்படி அவ்வளவு உயரத்தில் எழுதினார்கள் என்பது ஆச்சரியமானது.

தமிழ் எழுத்து பதியப்பட்டிருப்பது  உலகின் மூத்தமொழி தமிழ் என்பதற்கான ஆதாரமாகவும் திகழ்கிறது.  5000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த குகையில் அவ்வளவு  உயரமான திடகாத்திரமான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது.

காடுகளாக இருந்த அந்த உயரமான குகைகளில் வாழ்ந்த மனிதர்களின் சம்பவங்கள் ஆராய்ச்சிக்கு உரியது. எனது நபிமார்கள் அனுப்பப்படாத இடங்களும்,  சமூகங்களும் இல்லை என்ற திருக்குர்ஆனின் வரிகள் நெஞ்சில் நிழலாடுகிறது.

பேசுவோம்…!  இறைவன் நாடட்டும்..!

புனித ரமலான் வாழ்த்துக்கள்..