கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், திருமண உதவி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காகவும் வந்து செல்கின்றனர்.

கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு கீழக்கரை பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாது ஆலங்குளம், எக்கக்குடி, ஏர்வாடி, இதம்பாடல், களிமண்குண்டு, காஞ்சிரங்குடி, மல்லல், மாணிக்கனேரி, நல்லிருக்கை, பள்ள மோர்குளம், பனைக்குளம், பெரியப்பட்டினம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, வேளானூர் உள்ளிட்ட 25 கிராமவாசிகளும், பாமர மக்களும் அரசு சார்ந்த வேலைகளை முடிப்பதற்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் வேலை நேரங்களில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வேலை நேரங்களில் பணிக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்கு மனு செய்துள்ளனர்.

இந்த மனுவில் ”கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியரும் அவருடைய இருக்கையில் இருப்பதில்லை. எங்கு செல்கிறார் என்று தெரியவில்லை. துணை வட்டாட்சியரும் அவருடைய இருக்கையில் அமர்ந்து பணி செய்வதில்லை. இதனால் தாலுகா அலுவலக எழுத்தர்களும், அலுவலக உதவியாளர்களும் வேலை நேரங்களில் தங்கள் சொந்த வேலைகளை செய்ய வீட்டுக்கு சென்று விடுகின்றனர். இதனால் அலுவலக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு, பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

ஆகவே மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அவர்கள், பல மைல்களுக்கு அப்பால்இருந்து கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வரும் இந்த அப்பாவி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழக்கரை தாலுகா அதிகாரிகள் அனைவரையும் வேலை நேரங்களில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றிட உத்தரவிடுமாறும், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளின் வருகையை கண்காணிக்க CCTV கேமரா மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டினை ஏற்படுத்த ஆணையிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.