கீழக்கரை புதிய பேருந்து நிலையம் பகுதியில் குடித்து விட்டு ரகளை செய்யும் ‘குடி’ மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி துணை கண்காணிப்பாளருக்கு SDPI கட்சியினர் கோரிக்கை

(கோப்பு படம்)

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது அருந்தும் ‘குடி’ மகன்களால் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் பொதுமக்களும், அந்த பகுதியை கடந்து செல்லும் மாணவ மாணவிகளும், பெண்மணிகளும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த பேருந்து நிலையத்தின் பின் புறத்தில் தான் மீன் மார்கெட், காய்கறி மார்கெட், நியாய விலை மண்ணெண்ணெய் கடை இருக்கிறது. கால நேரம் பார்க்காமல் குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் இந்த குடிமகன்களால் மீன் மார்கெட்டிற்கு செல்பவர்களும், மண்ணெண்ணெய் வாங்க செல்லும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் இந்த பகுதி மிகுந்த மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக அமையப் பெற்றுள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் 500 கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால் அந்தி சாய்ந்த மாலை வேளைகளில் இந்த பகுதிக்கு பொது மக்கள் செல்ல மிகுந்த அச்சப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுக்களை வாங்கும் குடிமகன்கள், பேருந்து நிலைய வளாகத்தில் ஹாயாக, குடி நண்பர்களுடன் அமர்ந்து போதைகளை நிரப்பிக் கொள்கின்றனர். பின்னர் இங்கு தொடர்ந்து நடக்கும் ரகளைகளால், இரவு 7 மணிக்கு மேல், இந்த புதிய பேருந்து நிலைய பகுதி ரண களமாக மாறி விடுகிறது.

இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதிக்குள் பெண்கள் செல்வது அபாயகரமானதாக உருவெடுத்துள்ளது. பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்லவோ, பேருந்திற்காக காத்திருக்கவோ அச்சப்படுகின்றனர். இந்நிலையில் கீழக்கரை புதிய பேருந்து நிலைய பகுதிகளில் மது அருந்தி விட்டு அட்டகாசம் செய்யும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு கீழக்கரை நகர் SDPI கட்சி சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..