தொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்!

செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. மினுக்க வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே உறவுகளும் வாடிவிடும்.

அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி அருகே செல்ல வேண்டும். அதிக அன்பு வைத்திருப்பவர்களுக்கு மத்தியில்தான் அடிக்கடி பிணக்கு ஏற்படும். “என்னதான் இருந்தாலும் என்னோடு அவர் இவ்வாறு நடந்துகொண்டாரே..” என்பதுதான் ஒரே ஆதங்கமாக இருக்கும்.

அன்பும் நட்பும் மட்டுமல்ல.. குடும்ப உறுவுகள் சிதைவதற்கும் ஏதோ ஒரு சிறு காரணம் போதும். அகன்று செல்கிறார் என்று தோன்றும்போதே நாம் இன்னும் நெருக்கமாக முயல வேண்டும்.

ஒரு மரத்திலிருந்து இலட்சக்கணக்கில் தீக்குச்சிகள் செதுக்கலாம். அதேவேளை இலட்சோபலட்ச மரங்களை தீ வைத்துக் கொளுத்தவும் ஒரு தீக்குச்சியே போதும். உறவுகளும் அப்படித்தான்.

பிடிக்காத ஒரு வார்த்தையால்தான் சேர்ந்து இருந்த வளையங்கள் கழன்றுவிழுகிறது. இறுதியில்.. அழைத்தாலும் அலைபேசியை எடுப்பதில்லை.. வாட்ஸ் அப்பில் அவரது எண்ணைத் தடுத்து வைப்போம். அங்கே கண்டால் இங்கேயே முகம் திருப்புவோம்.

காலங்கள் கடந்துவிட்டால்.. “எதற்காக சண்டையிட்டோம்” என்பதுகூட மறந்துவிடுகிறது. ஆனாலும் உறவாட மனம் வருவதில்லை.

ஒரு புன்னகை போதும் வெறுப்பு நெருப்பை அணைக்க.. ஆனாலும் ஏனோ உள்ளுக்குள் ஒரு தயக்கம். ஒரு ஸலாம் போதும் அனைத்தையும் முடிவுக்குக்கொண்டுவர.. ஆனாலும் ஏனோ வீண் பிடிவாதம்.

இறைத்தூதராக வந்தபோது நபி (ஸல்) அவர்களை உறவுகள் வெறுத்தனர். ஒதுங்கினர்.. ஒதுக்கினர். ஆனால் நபிகளார் விடவில்லை.. அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றுகூட்டி அவர்களிடம் பேசினார்கள்:

“என் அருமை இரத்தபந்த உறவுகளே..! உலகமே உங்களுக்கு தீயவழி காட்டினாலும்.. ஒருபோதும் நான் உங்களுக்கு தீயவழி காட்டமாட்டேன். அருமை உறவுகளே! நான் கொண்டுவந்த சத்திய மார்க்கத்தை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆயினும் நமக்கிடையே இருக்கும் இரத்த பந்த உறவை ஏன் துண்டிக்கின்றீர்கள்..?. வாருங்கள் உறவைப் பேணுவோம்!”

மறந்துவிட வேண்டாம் உலகில்.. ” உறவு இல்லாவிட்டால் துறவு..!”. மறுமையிலோ உறவைத் துண்டித்து வாழ்ந்ததற்கும் பதில் சொல்ல வேண்டும்.

-நூஹ் மஹ்ழரி