நாடு நமக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்?..கல்வியாளரின் சமூக சிந்தனை…

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு.

விவசாயிகளுக்காக இன்று தமிழகமே போராடி வரும் வேலையில் விவசாயிகளை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட எதிர் கட்சிகளும் ஆளும் கட்சிகளும் கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். இவர்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளை மறைக்க இப்படி பகல் வேஷம் போடுகின்றனர். வெறும் போராட்டங்களால் மட்டுமே விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் ஏற்பட போவதில்லை என்பதை நன்கு அறிந்த இந்த அரசியல் கட்சிகள் மக்களை முட்டாளாக்கி ஓட்டு அரசியல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தை ஆண்ட கட்சியாக இருக்கட்டும் ஆளும் கட்சியாக இருக்கட்டும் இவர்கள் யாருமே தமிழ்நாட்டில் விவசாய நிலங்களை பாதுகாக்கவோ, நீர்நிலைகளை பாதுகாக்கவோ, பசுமை வளங்களை பாதுகாக்கவோ எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை. தமிழ்நாடு இன்று வறண்ட பூமியாக மாற யார் கரணம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும், நம் முன்னோர்கள் நமக்காக உண்டாக்கிய காடுகளையும், குளங்களையும், ஏரிகளையும் அழித்து வாழ்ந்து வரும் நாம் நாளைய நமது சந்ததியினருக்கு எதை உருவாக்கிவிட்டு செல்கிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் நம்பியே மக்கள் வாழ்ந்து வருகிறோம், ஆனால் அரசியல்வாதிகளோ ஆற்று மணலை கொள்ளையடிப்பவர்களாகவும், ஏரிகளை ஆக்கிரமித்து பட்டா போடுபவர்களாகவும், மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் பிணம் தின்னி கழுகுகளாகவும் இருக்கும் இவர்களால் மக்களுக்கு எப்படி நன்மை கிடைக்கும்? பூமிக்கு மேல் உள்ள வளங்களை எல்லாம் முடித்துவிட்டு இப்போது பூமிக்கு உள்ளே தோண்ட ஆரம்பித்து விட்டார்கள்!!!

அரசாங்கத்தில் விவசாயத்தை பாதுகாக்க வேளாண்துறை, காடுகளையும் வன விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பசுமை வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்று எண்ணற்ற துறைகளும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தும் டாஸ்மாக் துறை மட்டுமே தீவிரமாக செயல்பட்டு வருகிறது, அந்த துறைக்கு மட்டுமே நாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பசுமையை நாட்டின் மூலதனமாக கொண்டு செயல்படும் ஆஸ்திரேலியா நியுசிலாந்து போன்ற நாடுகளை கண்டு இன்று உலகில் அனைத்து நாடுகளும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய தொழிநுட்ப உதவியுடன் விவசாயத்தை வளர்த்து பாதுகாத்து வருகின்றது. ஆனால் நம் நாட்டிலோ இருப்பதையே பாதுகாக்க வழியின்றி பரிதவிக்கின்றோம், சீமை கருவேல மரங்கள் கூட நீதிமன்றம் கடும் உத்தரவு போட்ட பின்தான் அகற்றப்பட்டு வருகின்றன..

விவசாயம் நமக்கு வெறும் சோறு மட்டும் தான் தருகிறது என்று மனிதன் தவறாக உணர்வதால் இன்று விவசாயிகள் நடுரோட்டில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. “ என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்” என்ற பாரதியின் பாடல் இன்று கேள்விக்குறியானது!! நமது விவசாய நிலங்கள் அழிந்ததால் இன்று உணவுகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் அனைத்தும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதியாகி நாம் உண்டு வாழ்ந்து வருகிறோம். மண் வளம் பாதித்தால் மனித வளம் பாதிக்கும் என்பதை அறியாமல் வாழ்ந்து வருகிறோம். மனிதர்களின் வாழ்க்கையும்,கால்நடைகளும், பறவைகளுக்கும், பூச்சிகளும் ஏனைய உயிரினங்களும் ஒன்றோடொன்று இயற்கை தொடர்புடைய வாழ்க்கை வாழ்ந்து வருவதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும், கிராமங்கள் தழைத்தால் நகரங்கள் நிலைக்கும் என்பதை நாம் அனைவரும் சிந்தித்து கிராம மேம்பாட்டிட்ற்கு உதவ வேண்டும். நாடு உனக்கென்ன செய்தது என்பதை விட நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும், கேள்வி கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் களத்தில் இறங்கி பணியாற்றவேண்டும், கீழக்கரையில் பசுமை திட்டத்தின் மூலம் நமது ஊர் மக்கள் பல்வேறு இடங்களில் மரங்களை நட்டு வருகிறோம், அதன் தொடர்ச்சியாக நாம் நமது ஊர் அருகில் இருக்கும் கிராமத்தை தேர்ந்தெடுத்து கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி அங்குள்ள ஏரி, குளங்களை செம்மை படுத்தி கிராம மேம்பட பாடுபடுவோம் என்பதை இந்த தளத்தின் வாயிலாக வலியுறுத்தி என்னோடு பங்கேற்று பணியாற்ற தயாராக இருக்கும் அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

விரைவில் நம் பணி தொடரும் …

நன்றியுடன்…

எம்.எம்.கே. இப்ராகிம்,
தாளாளர்,
இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள்,

கீழக்கரை.