அழிந்து வரும் விளை நிலங்கள்.. மாடி வீட்டுத் தோட்டம்.. மாறி வரும் எண்ணோட்டங்கள்…

ஓடி விளையாடிய தோட்டங்கள் மறைந்து, எங்கு நோக்கினும் ஓங்கி நிற்கும் மாளிகைகளே இன்றைய கிராமத்தின் நிலை. விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நம்முடைய வாழ்வாதாரங்களை அழித்து வருகிறோம் என்பதுதான் உண்மை.கிராமங்கள், நகர் புறங்களாக விரிவடைந்து வருவதால் விவசாயம் முற்றிலும் அழிந்து வருவதை நம் கண் முன் பார்த்து வருகிறோம்.

கிராமம் என்ற வார்த்தையை செவியுற்றவுடன் பசுமையான வயல்களும், தோடங்களும், நீர் நிலைகளும் நம் மனக் கதவுகளை தட்டி எழுப்பும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் வரும் காலத்தில் நிரந்தரக் கனவாகவே மாறிவிடும் அபாயகரமான காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம் என்பதுதான் நிதர்சன உண்மை.

பல வருடங்கள் கழித்து வெளி நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் போது கட்டடங்களாக மாறிப் போன விவசாய நிலங்களை பார்க்கும் கண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பருவ மழை பொய்த்து போனதால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகளின் தற்கொலை ஒரு புறம் இருக்க, நல்ல விலை கொடுத்து விளை நிலங்களை வாங்கி அரண்மனைகளாகவும், வியாபார ஸ்தலங்களாக உருவாக்கி வருவதையும் நம்மால் காண முடிகிறது.

நகர புறம் விரிவடைவந்தாலும் இயற்கை விவசாயம் நம்மை விட்டு விலகி சென்று விடக்கூடாது என்பதில் இயற்கை விவசாய விரும்பிகளும், சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களும் அதற்கான வழிமுறைகளை வகுத்த வண்ணம் உள்ளார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் வீட்டு மாடிகளில் அதிகரித்து வரும் இயற்கை விவசாயம் (Organic Vegetation).

இந்த மாடி வீட்டு விவசாயம் சுற்று புற சூழல் மாசுபட்டு வெப்ப மயம் ஆவதை தடுக்கும் சுவராகவும் இருக்கிறது. ஆகையால் மொட்டை மாடியில் விவசாயம் அவசியம் என்பதை இயற்கை ஆர்வலர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வீட்டின் முன் புறத்திலும், மொட்டை மாடியிலும் காய் கறிகள், மூலிகைகள் போன்ற செடிகளை வளர்ப்பதன் மூலம் நம் கைக்கு எட்டிய தூரத்தில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், சுற்று சூழலை பாதுகாக்கவும் ஏதுவாக அமைகிறது.

திறந்த மாடியில் உள்ள தோட்டங்களை காணும் போது மனதுக்கு இதமாகவும், சுத்தமான சுவாசமும், பாபிலோன் தொங்கும் தோட்டத்தின் எண்ணமும் நம்மை ஆட்கொள்ளும். இயற்கையை போற்றுவோம், வருங்கால தலைமுறைக்கு ஆரோக்கிய வாழ்வைக் கொடுப்போம்.