இன்று சர்வதேச ‘மகளிர் தினம்’ – பெண்ணியம் காப்போம் – சிறப்பு கட்டுரை

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பு, ஆதரவு, அடக்கம், இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழும், இறைவனின் உன்னதமான படைப்பினம் பெண்

ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், இல்லத்தரசியாய், சகோதரியாய், தோழியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? பாசத்தால் வார்த்தெடுத்த உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். சவால்களை தகர்த்து, சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும் உயர்வான எண்ணங்களும் வலிமையான ஊக்கமும் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்து கொண்டிருக்கும் பார் போற்றும் பூ மகள்கள் ஆயிரமாயிரம்.

வேலைக்கு சென்று உழைக்கும் ஆண் மகன் மட்டும் தான் உழைப்பாளி என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு செல்லும் காலத்தில் தான் நாம் வாழ்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் அடுப்பாங்கரையில் அறுசுவை உணவுகளை, நாவிற்கினிய சமையலை நமக்காக வியர்த்து விறுவிறுத்து சமைத்து பாசத்தையும் சேர்த்து நமக்கு பரிமாறும் அன்பான உழைப்பாளி வர்க்கத்தை மட்டும் வாழ்த்த மனமின்றி மறந்தே தான் போகிறோம்.

கால ஓட்டத்தில் பொருளாதாரம் தேடி ஓடிக் கொண்டே இருக்கும் ஆண் வர்க்கத்திற்காக அதி வேகமாய் நகரும் மணித்துளிகளில் ஏக்கத்துடன் காத்திருக்கும் பெண்ணினம் பெருமைக்குரியது.

‘பெண் இன்றிப் பெருமையும் இல்லை; கண் இன்றி காட்சியும் இல்லை’ என்பது நம் முன்னோர்களின் முது மொழிகளுள் ஒன்று. மனித உடம்பில் கண்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சமூகத்தில் பெண்களும் முக்கியமானவர்களேயாவர். கடந்த காலங்களில் ஆண் ஆதிக்கத்தின் கீழாக அடிமைப்பட்ட பெண்ணியம்.. பேச்சுரிமை, கல்வி கற்கும் உரிமை, சுயவிருப்பிலான விவாக உரிமை, வழிபாட்டுரிமை என்பன அற்றவர்களாகவே இருந்தனர்.

பின்னர் சுதந்திர தேசத்தில் பாரதி கண்ட புதுமை பெண்களாய் தமக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு ‘நாங்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல’ என்பதனை நிரூபிக்கும் வகையில் மண் முதல் விண் வரை சமூகத்தின் எத்துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளமையை நாம் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.

இல்லத் தலைவியாக மட்டுமே இருந்த அன்றையப் பெண்கள் இன்று நாட்டின் தலைவியாகவும், உலகத்தின் முதல்வியாகவும், ஆண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு முன்னிலையை அடைய தங்கள் ஆளுமைகளை விருத்தி செய்திருக்கின்றனர்.

அதே வேளையில் பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் கொடிய அவல நிலை இன்னும் உலகில் நீங்கியபாடாக இல்லை. படிக்கின்ற இடங்கள், பணிபுரிகின்ற இடங்கள், பொது இடங்கள், வீடுகளிலும் கூட பெண்களுக்கு எதிராக வன்முறைகள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

இவற்றை களைய வேண்டுமென்றால் பெண்களை கண்ணியத்துடன் மதிக்க வேண்டிய நெஞ்சார்ந்த உணர்வினை ஆண் சமூகம் பெற்றாக வேண்டும். தாமும் ஒரு பெண்ணாகிய தாய் வயிற்றிலிருந்து உலகிற்கு வந்த படைப்பினம் தான் என்பதை உணர வேண்டும். ஆகவே பெண்களின் மகத்துவத்தை மனதார உணர்ந்தவர்களாக பெண்ணியம் காக்க இந்த மகளிர் தின நாளில் உறுதி ஏற்போம்.

இந்த இனிய நன்னாளில் அனைத்து மகளிர்க்கும் கீழை நியூஸ் சார்பாக இனிய மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..