சீமைக் கருவேல மரங்களை அகற்ற 2 மாதத்திற்குள் சிறப்புச் சட்டம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற இரண்டு மாதத்திற்குள் தமிழக அரசு சிறப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதிமுக தலைவர் வைகோ விளைநிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அதே போல் பல்வேறு சமூக ஆர்வலர்களும் பொது நல வழக்குகளை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்தனர்.  இந்த வழக்குகள் பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு கடந்த 2016 டிசம்பர் மாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது. அதில் தமிழகத்தில் ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவில் கூறியிருந்தது.

அதன்படி சில மாவட்டகங்களில் அந்த பணி நடந்து வந்தது. இதுகுறித்து கண்காணிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழக்கறிஞர் குழுவை நியமித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரிடம், நீதிபதிகள் கருவேல மரங்கள் அகற்றும் பணி எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இருமாவட்டங்களில் 90% பணிகள் நிறைவடைந்து உள்ளன என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிமன்ற வழக்கறிஞர் குழுவினர் அளித்த ஆய்வறிக்கையை பார்வையிட்ட பின்னர் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு பிறகு 15% தான் பணிகள் 13 மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளன. இது எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. சில மாவட்ட கலெக்டர்கள் இந்த பணியில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இன்னும் 15 நாட்களுக்குள் பணியை முழுமையாக முடிக்க வேண்டும். அதற்கான நிதியை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செய்யவேண்டும்.

இன்னும் இரண்டு மாதத்திற்குள் அரசு சிறப்புச்சட்டம் இயற்றி முழுமையாக இதனை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அடிக்கடி மாவட்ட நீதிபதிகள், கலெக்டர்கள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். தேவைபடும் பட்ச்சத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகிய நாங்களே ஆய்வு மேற்கொள்வோம். இதுகுறித்து ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் குழுவும் கண்காணிப்பில் ஈடுபடும். சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.