கீழக்கரையில் என்று தீரும் ‘குடும்ப அட்டை’ பிரச்சனைகள் ? – சமூக ஆர்வலர்கள் கவலை

கீழக்கரையில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப நபர்களின் ஆதார் எண்ணை இணைக்காவிடின், நியாய விலை கடையில் எந்த பொருட்களும் கிடைக்காது என அரசு அறிவித்தது.

கீழக்கரை நகரில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கார்டுகள் பிளாக் செய்யப்பட்டது. அதன் பின் ஒருசிலரை தவிர அனைவரும் தங்களது கார்டுகளை ஆக்டிவேட் செய்ய தாலூகா அலுவலகம் சென்று ஆன்லைன் பதிவு செய்துவந்தனர். 45 நாட்கள் பின் சம்பந்தப்பட்ட கடைகளில் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று வாய்மொழி உத்தரவு வந்தது. இதில் பலர் அலைந்து திரிந்து பயனடைந்தாலும் நூற்றுகணக்கோர் இன்னும் அலைந்தபடி இருக்கின்றனர்.

இதுகுறித்து விளக்கி சொன்னமையால் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் தமீம் ராஜா அவர்கள் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று இரு நாட்கள் சிறப்பு அனுமதி வாங்கி, கார்டில் ஆதார் எண் இணைக்கலாம் என அறிவித்தார். ஆனால் முதல் நாள் பலருக்கு சம்பந்தப்பட்ட கடைகளில் ஆதார் எண் ஏறவில்லை. ஏமாற்றத்துடன் சென்றனர். அடுத்த நாள் வெள்ளிக் கிழமை என பெரும்பாலான கடைகள் திறக்கவே இல்லை.

இதன் பின்னும் ஆதார் எண் ஏறாமல் இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும் என மறு அறிவிப்பு. செப்டம்பரில் ஆன்லைன் பதிவு செய்து பலமுறை ரேசன் கடைக்கு அலைந்து திரிந்தவர்கள் ஏன் இராம்நாட் செல்ல வேண்டும் ?  ஆதார் கார்டு கொண்டுவராதவர்களில் பலருக்கு ஆதார் கார்டு கைகளில் கிட்டவில்லை. பலர் கார்டு கொண்டு போயும் கூட ரேஷன் கடையில் உள்ள மிசினில் ஏறவில்லை.

இக்குறையை நீக்க மீண்டும் இருநாள் அவகாசத்தில் ரேசன் கடையில் ஏற்ற அனுமதி தந்தால் பொதுமக்கள் அலைவது தவிர்க்க ஒரு வாய்ப்பு கிட்டும்.  இதுபற்றி மக்கள் டீம் காதர் கூறுகையில், ”இன்னும் இரு நாட்கள் சிறப்பு அனுமதி பெற்றுத் தர கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம், அதற்கும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சிந்திக்க வேண்டும். இப்பொழுது இராமநாதபுரம் வர சொல்லும் அதிகாரிகள், இதற்கு சரியான தீர்வு எட்டவில்லை என்றால் சென்னை வரை இழுத்தடிப்பார்கள்” என்றார்.

மக்களின் பிரச்சினைக்கும், ஆதங்கத்துக்கும் அரசாங்க அதிகாரிகள் செவி சாய்ப்பார்களா??