தமிழகத்தில் ஏப்ரல்-1 முதல், ரேஷன் கார்டுக்கு மாற்றாக, புதிய ‘மின்னணு குடும்ப அட்டை’ – ஸ்மார்ட் கார்டு

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இப்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை பதிவு செய்துள்ளனர் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சென்னை சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 1.11.16 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட, உலகம் போற்றும் உன்னத திட்டமான விலையில்லா அரிசி வழங்கும் திட்டமும் தொடரும், இத்திட்டத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கூடுதல் பயன்களுடன் உணவு பாதுகாப்பு சட்டமும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார். இத்திட்டத்தின் முழு பயன்களும் உரியவர்களை சென்றடைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும் என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் குறிப்பிட்டவாறு, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, 1.4.2017 முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இன்று வரை, 5 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர். இது தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதமாகும். மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உடனடியாக பெற்று அங்காடிகளில் உள்ள விற்பனை இயந்திரத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அலுவலர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதுவரை 18 இலட்சத்து 54 ஆயிரத்து 700 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தயாராக உள்ள 29 ஆயிரத்து 815 குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை, 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக ஒவ்வொரு மாதமும், இரண்டாம் சனிக்கிழமையன்று நடத்தப்படும் குறைதீர் முகாம்களில், இன்று வரை, 5 லட்சத்து 77 ஆயிரத்து 053 மனுக்கள் பெறப்பட்டு, 5 இலட்சத்து 55 ஆயிரத்து 781 மனுக்கள் மீது அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் மட்டும்தான் இவ்வகை முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கோபால், உணவு பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் எஸ்.மதுமதி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.