கீழக்கரையில் சீமை கருவேல மர ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – ஆறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்திலேயே நம் இராமநாதபுரம் மாவட்டம் தான் வறட்சிக்கு பெயர் போன மாவட்டம் ஆகும். தண்ணியில்லா காடு, விவசாயமில்லா பூமி, பஞ்சம் பிழைக்க அதிகம் அயல் நாடு செல்லும் பகுதி, பின் தங்கிய மாவட்டம் என்றெல்லாம் தனி பெரும் பெருமை நமக்குண்டு. இதற்கெல்லாம் ஆணி வேறாக இருப்பது நம் வளத்தை எல்லாம் உறுஞ்சி சக்கையை மென்று துப்பி கொண்டிருக்கும் அரக்கனாகிய சீமை கருவேல மரங்கள். இதனை வேரோடு பிடுங்கி அழித்தொழிக்க நம் தேசத்தின் நான்கு தூண்களாகிய நீதிமன்றமும் அரசாங்கமும், அரசு துறை அலுவலர்களும், ஊடகங்களும் கை கோர்த்து களமிறங்கி விட்டனர். இவர்களோடு பொது நல அமைப்பினரும், பள்ளி கல்லூரி மாணாக்கர்களும் தம் ஜனநாயக கடமையாக தற்போது கருவேல அசுரனை அழித்தொழிக்க ஆயத்தமாகி விட்டனர்.

அதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் இன்று 06.02.2017 இராமநாதபுரம் மாவட்ட தொடக்க கல்வி துறை சார்பாக சீமை கருவேல மர ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியினை திருப்புல்லாணி கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் தங்க கனி மொழி துவங்கி வைத்து சீமை கருவேல மரங்களின் தீமைகளையும், இதனை வேரோடு அழிப்பதில் மாணவர்களின் பங்கினையும் விளக்கினார். அதன் பிறகு பேரணி அங்கிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இந்த பேரணியில் பங்கேற்ற ஆறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் கைகளில் சீமை கருவேல மரங்களின் தீமைகளை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் ஹமீதியா தொடக்கப் பள்ளி, ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி, இஸ்லாமியா தொடக்கப் பள்ளி, மஹ்தூமியா தொடக்கப் பள்ளி, சதக்கத்துன் ஜாரியா நடு நிலை பள்ளி, CSI நடு நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ மாணவிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர். இந்த பேரணியினால், சீமை கரு வேல மரத்தின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வு கிடைத்தது வரவேற்கத்தக்கது. இந்த சிறப்பான பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

பேரணியின் புகைப்படத்தொகுப்பு கீழே:-

     

புனித ரமலான் வாழ்த்துக்கள்..