கீழக்கரை 3 வது வார்டு பகுதிகளில் நகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு – கீழக்கரை மக்கள் களம் கண்டனம்…

கீழக்கரை நகராட்சியில் பெத்தரி தெரு, புது கிழக்குத் தெரு, பட்டாணி அப்பா சாலை, பிஸ்மில்லாஹ் நகர், இருபத்தியொரு குச்சி உள்ளிட்ட 3 வது வார்டு பகுதிகளில் கடந்த 2011 முதல் 2016 காலகட்டத்தில் மட்டும் ரூ.27,00,000 இருபத்தியேழு இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள், கழிப்பறை , கிணறு தூர் வாரும் பணி, கழிவு நீர் பைப்லைன் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நகராட்சி சார்பில் பதில் தரப்பட்டுள்ளது. ஆனால் 40 சதவீதம் அளவுக்கு கூட வேலைகள் நடைபெறாமல் கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து கீழக்கரை மக்கள் களத்தின் துணை தலைவர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் கூறும் போது ”தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் புது கிழக்குத் தெருவை சேர்ந்த சட்டப் போராளி ஹபீல் ரஹ்மான் பெற்றுள்ள தகவலின் அடிப்படையில் சட்டப் போராளிகள் குழு இன்று இந்த பகுதியில் ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் கீழக்கரை 3 வது வார்டு பகுதியில் நகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வருகிறது. போடாத சாலைக்கு பணம், தூர்வாறாத கிணறுக்கு பணம், கட்டாத கழிப்பறைகளுக்கு பணம் என்று ஏகத்துக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.

தகவல் அறியும் சட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் மனு அனுப்புவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும். மேலும் மக்கள் பணத்தை வாயில் அள்ளி போட்டு ஊழலில் திளைத்த பெருச்சாளிகளுக்கு கீழக்கரை மக்கள் களம் தன் கண்டனத்தை பதிவு செய்கிறது” இவ்வாறு தெரிவித்தார்