நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.. முதுகெலும்பைக் காக்க “மக்கள் பாதை ” இயக்கம் போராட்டம்..

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 30 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளார்கள் அல்லது தற்கொலை செய்துள்ளார்கள், ஆக மொத்தத்தில் நாட்டின் முதுகெலும்புகள் உடைந்துள்ளன இல்லையென்றால்   உடைக்கப்பட்டுள்ளன என்று கூட கூறலாம்.  தமிழகத்தில் அமைச்சர்கள் ஒரு புறம் மரணம் அடையும் விவசாயியைப் பார்த்து நையாண்டி மறுபுறம் சேதங்களைப் பார்வையிட மறந்தாலும் அம்மாக்கள் புகழ் பாட மறப்பதில்லை, இதுதான் மண்ணுக்காக உயிரை இழந்த விவசாய நண்பனுக்கு நம் அரசு கொடுக்கும் மரியாதை.  இந்தக் கொடுமைக்கு  எல்லாம் காரணம் வறட்சி மேலாண்மைக் கையேடு என்பது ஒன்று இருப்பதே நம் மாநில அமைச்சர்கள் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாக இருக்கும்.

நம் பக்கத்து மாநிலமான கேரள மற்றும் கர்நாடகா தங்களது மாநிலங்களை வறட்சி மேலாண்மை வரைமுறைக்கு உட்பட்டு வறட்சி மாநிலங்களாக அறிவித்து 800 கோடிக்கு மேல் நிவாரண நிதி பெற்றுவிட்டார்கள்.  ஆனால் நம் மாநிலமோ இன்னும் அரசு அறிக்கை ரீதியாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கூட தயக்கம்.

இத்தகைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு IAS அதிகாரி சகாயம் அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் ‘மக்கள் பாதை’ இயக்கம் விவசாயிகளுக்காக இன்று முதற்கட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.  இன்று சென்னை சேப்பாக்கம் மைதானம் எதிரில் உணவளிக்கும் உழவனின் உயிரைக் காக்க பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.  ஒரு நடிகைக்கு கல்யாணம் நடந்தால் பல மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சிகள் நாட்டிற்கு முக்கியம் வாய்ந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மிகவும் வேதனைக்குரிய விசயம்.

நாட்டின் விவசாயிகளின் வேதனையைக் குறித்து சிங்காரக் கவிஞன் ஒருவன் கீழே வேதனையைக் கவிதையாக கொட்டி தீர்த்துள்ளான்…

 

உழவனின் குரல்

கோடையின் கொடை,
பஞ்சத்தில் பஞ்சாலை,
வெடித்த பருத்தியில்
பஞ்சும் இல்லை ,
நட்ட விதையும் இல்லை,
கழனி எங்கும்
கரிசல் வாடை
கோடையின் கொடை
கழனியில் தண்ணியும் இல்ல
தென்னையிலே யளனியும் இல்ல
விதைச்ச சோளம் முளைக்கவும் இல்ல
நட்ட கம்பும்
வளரவும் இல்ல விதைக்காம வளருது ஒரு பிள்ளை
அது
வறுமையெனும்
ஒசந்த பிள்ளை.
அன்று
வள்ளல் பட்டம்
வாங்கி கொடுத்த வள்ளம்
அல்ல அல்ல அசராத வள்ளம்
வாரி வாரி தேயாத
வள்ளம்
களத்தில் இருந்த வள்ளம்
இன்று
கைகளில்
பிச்சை பாத்திரமாய்,

வயல்களில் நீர் துளி,
அது
வானத்து மழைத்துளியும் அல்ல ,
அதிகாலை பனித்துளியும் அல்ல ,
விவசாயின்
கண்ணீர் துளி,
வயல்களில் நீர் துளி

கையில் இருந்த தாளும் பறிபோனது
களத்தில் அடித்த நெற்தாளும்
பதராய் போனது

மாட்டுக்கு
புல்லும் இல்லை மனுசனுக்கு
நெல்லும் இல்ல

களையெடுத்தவன் கைகள் கஞ்சிக்கு ஏங்குது
கந்து வட்டி கைகள்
கரன்சி நோட்டை எண்ணுது

விவசாயம்
இது ஆவணம் அல்ல,

**மிஞ்சியது கோவணம்**

1 Comment

  1. கீழக்கரையில் மாடி தோட்டம் அமைப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ,குறைந்த செலவில் பல கீரை வகைகள் , மற்றும் காய்கறிகளை நமது வீடுகளிலேயே உற்பத்தி செய்ய முடியும் , இதற்க்கு தேங்காய் நாறுகளை ,மண்ணாக பயன்படுத்தலாம் , பள்ளி , கல்லூரிகளில் விவசாயத்தின் முக்கியத்துவதையும் , மாடி தோட்டம் பற்றிய விழுப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் ,மாடி தோட்டத்தினால் இயற்கை உரங்களை பயப்படுத்தி நல்ல காய்கறிகளை பெற முடியும் , பெண்கள் ஓய்வு நேரத்தை மாடி தோட்டத்தினால் பயனுள்ளதாக பொழுது போக்கலாம் ,

Comments are closed.