+2 வெற்றி நமதே இரண்டாம் நாள் நிகழ்ச்சி இனிதே நடந்தது…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி தஸ்தகீர் கலை அரங்கத்தில் அறக்கட்டளைத் தலைவர் SM. யூசுப் சாகிப் தலைமையிலும்,  அறக்கட்டளை  இயக்குநர் ஹாமீது இபுராஹிம், கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் மற்றும் முதல்வர்  முனைவர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.  கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தனது சிறப்புரையில் வருகை தந்திருக்கும்  மாணவ செல்வங்களுக்கு முதலில்  என்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். நமது இராமநாதபுர மாவட்டத்தை உலகறிய செய்தவர் நமது இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவரும்,  முன்னாள் குடியரசுத் தலைவருமாகிய APJ.அப்துல்கலாம் அவர்கள் படிக்கும் பொழுது விடாமுயற்சியுடன் உழைத்து இந்தியாவை உலகமே வியக்குமளவுக்கு தனது சாதனை மூலமாக வியக்கச் செய்தார். கற்கையில் கல்வி கசப்பு! கற்றபின் அதுவே இனிப்பு! என்பது பழமொழி. அவர் கண்ட கனவு போல் நீங்களும் பல சாதனைகளை புரிந்து நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென கூறினார்.  இந்த மாதிரி நிகழ்ச்சிகள் உங்களை கஷ்டப்பட்டு படிக்காமல், இஷ்டப்பட்டு படிக்கும் மனநிலையை தரும் என்பதில் ஐயமில்லை. உங்களின் இந்த ஆர்வத்தை பார்க்கும் போது வரும் பொதுத்தேர்வில் நமது இராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவியர்கள் மாநிலத்தில் மிகச்சிறந்த இடங்களை பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது. ஆகவே மாணவர்களாகிய நீங்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறேன்.

இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கலந்துகொண்டு தனது சிறப்புரையில் நமது இராமநாதபுரம் மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டம் என்று சொல்கிறார்கள் ஆனால் நமது மாவட்டம் தற்பொழுது கல்வியில் 97.6 சதவீதம் பெற்று  8 வது இடத்தை தக்க வைத்துள்ளது. நீங்கள் தன்னம்பிக்கையுடன் படித்து நமது மாவட்டத்தை கல்வியில் மாநிலத்தில் முதல் மாவட்டமாக வெற்றி பெற செய்ய வேண்டும் மேலும் இது போன்ற நிகழ்ச்சி வருகின்ற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு உங்களுக்கு உறுதுணையாக அமையும் என்று வாழ்த்தினார்.    +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கிய சாத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளி இயற்பியல் பிரிவு ஆசிரியர்  தங்க பாண்டியன், மங்களக்குடி  அரசு உயர்நிலைப் பள்ளி  வேதியியல் பிரிவு சூர்யா,  இராமநாதபுரம் எலைட் ஒருங்கிணைப்பாளர் கணித பிரிவு ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நாளைய வெற்றியாளர்களாக விளங்க வேண்டும் என்று ஆலோசனைகளை விளக்கங்களுடன் எடுத்துக் கூறினர். மேலும் சாதனையாளர்கள் உருவாவது அவர்களுடைய விடாமுயற்சியால்தான் நீங்கள் நாளைய சாதனை படைக்கும் பொறியாளாராக உருவாவதற்கு விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தினர்.

கல்லூரியின் கணினி பொறியியல் துறை துணைப் பேராசிரியர் ரசினாபேகம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு  உதவித்தொகைகள் கிடைக்கக்கூடியது பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கட்டிடகலைத்துறையை பற்றி கட்டிடகலைத்துறை துணைப் பேராசிரியர் பிரவீன்  விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை ஹமீதியா, இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளிகள், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடி, சிக்கல், கன்னிராஜபுரம், சாயல்குடி, வண்ணாங்குண்டு, திருப்புல்லாணி, மாரியூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இந்த வெற்றி நமதே நிகழ்ச்சியின் மூலம் +2 தேர்வினை எவ்வாறு எழுதுவது மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டு பயனடைந்தனர்.

முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.இயந்திர பொறியியல் துறைத் தலைவர் முனைவர் கனகசுந்தரம் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மயில்வேல் நாதன், ராஜகுபேந்திரன், கார்த்திகேயன், ஷேக்யூசுப், அமானுல்லாகான் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.