கீழக்கரை நகரைப் பற்றிய ஓர் அறிமுகம்

கீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும்.

அந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன.

இங்குள்ள பார்களில் சங்கு, முத்துச்சிப்பி, வண்ணமீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.. இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கீழக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழக்கரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கீழக்கரையில் பல சமூக அமைப்புகள் பல பணிகளை ஆற்றி வருகின்றன,அதில் குறிப்பிடப்படக்கூடிய ஒரு முக்கிய அமைப்பு வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும் – North Street Association for Social Activites (NASA). இவ்வமைப்பு 1997 ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 வருடங்களாக பல சமுதாயப்பணிகளை மக்களிக்கு அளித்து வருகிறார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..