Home செய்திகள் தென்காசி ரயில்வே மேம்பாலத்தை அழகுபடுத்திய காவல்துறை; பொது மக்கள் பாராட்டு..

தென்காசி ரயில்வே மேம்பாலத்தை அழகுபடுத்திய காவல்துறை; பொது மக்கள் பாராட்டு..

by mohan

தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை பல வண்ணங்களால் தென்காசி காவல் துறையினர் அழகுபடுத்தியுள்ளனர். காவல் துறையின் இந்த செயல் பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பொதுமக்கள் சமூக வலை தளங்கள் மூலம் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி ரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த மேம்பாலத்தில் உள்ள சுற்றுச்சுவர் பகுதிகளில் பல்வேறு அரசியல்,மதம்,ஜாதி மற்றும் இதர நிகழ்ச்சிகளின் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டி பொலிவற்ற நிலையில் காணப்பட்டது. தென்காசி காவல் துறையின் முயற்சியால் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல் துறையினர் சீர்மிகு படுத்தி பொதுமக்களை சுண்டி இழுக்கும் வகையில் வண்ணமயமாக மாற்றி பல வாசகங்கள் எழுதி அசத்தியுள்ளனர். மேலும் இந்த மேம்பாலத்தில் உள்ள சுவரில் “வண்ணங்களில் இல்லை வாழ்க்கை உன் மன எண்ணங்களில்” என்றும், “தங்கள் வாழ்க்கை வண்ணமயமாக அமைய வேண்டும்” , “உன் திறமையை வெளிக்காட்டி உலகம் உன்னை கண்டறியும்”, என்பன உள்ளிட்ட வாசகங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த மேம்பாலத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தென்காசி காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.மேலும் தென்காசி ரயில்வே மேம்பால நடுப்பக்க வளைவுகள் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. ஆனால் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பொது மக்கள் நடந்து செல்வதற்காக கட்டப்பட்டுள்ள “சப்-வே” நிரந்தரமாக மூடப்பட்டு உள்ளது. இந்த “சப்-வே” திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், அல்லது திருநெல்வேலி ஜங்ஷன் மேம்பாலத்தில் இருப்பது போல மக்கள் நடைபாதை படிக்கட்டு பாலம் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!