தமிழக முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற சிறுமி..

பிளீச்சிங் பவுடரை தவறுதலாக சாப்பிட்ட செங்கோட்டை சிறுமி இசக்கியம்மாள் உடல் நலம் அடைந்து தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் சிறுமி இசக்கியம்மாள். இவரது பெற்றோர் சீதாராஜ், பிரேமா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி இசக்கியம்மாள் பிளீச்சிங் பவுடரை தவறுதலாக உட்கொண்டார். இதனால் சிறுமியின் உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் காணப்பட்டார். சிறுமியின் உடல் நிலை குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சீரிய முயற்சியினால் சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையை தொடர்ந்து சிறுமி இசக்கியம்மாள் உடல் நலம் பெற்றார். இந்நிலையில் செங்கோட்டையைச் சேர்ந்த சிறுமி இசக்கியம்மாள் பெற்றோர் எஸ்.சீதாராஜ் மற்றும் பிரேமா ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி இசக்கியம்மாளின் தொடர் சிகிச்சைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார். அப்போது தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்