தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் குறித்த சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட அனைத்து சிறப்பு மகளிர் மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் 15 வயதிற்கு மேற்பட்ட மார்பகம் தொடர்பான பிரச்சினை உள்ள அனைத்து மகளிருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மார்பகம் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும், ஸ்கேன்,மாமோகிராம், நோய் அறிகுறி பற்றிய ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது..

முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நெல்லை கேன்சர் கேர் சென்டர், குற்றாலம் ரோட்டரி கிளப், தென்காசி மகளிர் சக்தி ரோட்டரி கிளப் இணைந்து நடத்தியது. 22.10.21 காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கீதா வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கன் தலைமை தாங்கி மார்பகப் புற்றுநோய் பற்றியும்,தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார்.நிகழ்வில் வருவாய் அலுவலர் திருமதி ஜனனி சவுந்தர்யா சிறப்புரையாற்றினார். தென்காசி சக்தி ரோட்டரி கிளப் தலைவர் கிருஷ்ணவேணி அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பேசினார். சக்தி ரோட்டரி கிளப் மூலம் நோயிலிருந்து குணமான பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நெல்லை கேன்சர் சென்டர் உதவும் கரங்கள் முருகன் ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறியும் அவசியத்தினை பற்றி பேசினார். குற்றாலம் ரோட்டரி கிளை தலைவர் பிரகாஷ் கலந்து கொண்டு இது போன்ற மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினார். இந்த முகாமில் சுமார் 128 மகளிர் பங்குபெற்று, மார்பகப் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்றுக் கொண்டனர். பிங்க் அக்டோபர் சிறப்பு மார்பக புற்றுநோய் முகாமில், மருத்துவர் கீதா,மருத்துவர் லதா, மருத்துவர் மல்லிகா, ஜெரின் இவாஞ்சலின், மருத்துவர் சுவர்ணலதா, மருத்துவர் மணிமாலா, மருத்துவர் வளர்மதி, மயக்க மருத்துவர் ராஜேஸ்வரி,மருத்துவர் ஷீபா, மருத்துவர் இர்பான் உல்ஹக், மருத்துவர் ரஜினிகாந்த், அல்மாஸ் பானு, மருத்துவர் அன்னபேபி, மருத்துவர் ஷமிமா, மருத்துவர் முத்துக்குமாரசாமி, மருத்துவர் கோபிகா,ஆயுஷ் மருத்துவர் மேனகா, மருத்துவர் மகிதாசிரி,மருத்துவர் சிவ நந்தினி, மருத்துவர் உமா மகேஸ்வரி ஆகியோர் சிகிச்சை வழங்கினார்கள். நிகழ்வின் இறுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்