இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த பத்ம விபூஷன் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1940).

கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (Dr. Krishnaswamy Kasturirangan) அக்டோபர் 24, 1940ல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார். தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஸ்ரீஇராம் வர்மா அரசு உயர் நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மத்திய மும்பையின், மாதுங்காவில் உள்ள ராம்நரைன் ரூயா கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார். அகமதாபாத், பெசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி, 1971 இல், உயர் ஆற்றல் வானியலில் தனது டாக்டர் பட்டம் பெற்றார். வானியல், விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாடுகளில் 244 க்கும் மேற்பட்ட ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார்.இந்திய விண்வெளித் துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைகோள்கள் (இன்சாட் வரிசை செயற்கை கோள்கள்), இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (ஐஆர்எஸ் வரிசை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைகோள்கள், துருவச் செயற்கைக்கோள், ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி), என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்றார். 1993 முதல் 2003 வரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்தார். மாநிலங்களவை உறுப்பினராக 1994 முதல் 2003 வரை பணியாற்றினார். 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியுள்ளார். 2004 ஏப்ரல் முதல் 2009 வரை பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் இயக்குநராகவும் இருந்தார். தற்போது ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். டாக்டர் கஸ்தூரிரங்கன் 16 பல்கலைக் கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.இந்திய அரசால் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய பத்மஸ்ரீ (1982), பத்ம பூஷன் (1992) மற்றும் பத்ம விபூஷன் (2000) ஆகிய மூன்று முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, ஸ்ரீ ஹரி ஓம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாரா பாய் ப்ரெரிட் விருது, எம்.பி. பிர்லா நினைவு விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.Source By: Wikipediaதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.