மதுபானக்கடையை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது – போலீசார் விசாரணை.

மதுரை அ.கல்லுப்பட்டியை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர் நேற்று மாலை எல்லீஸ்நகர் 70 அடி ரோட்டில் உள்ள மதுபான கூடத்துக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அருண் பிரகாஷிடம் தங்களுக்கு இலவசமாக மதுபானம் வாங்கித் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அருண் பிரகாஷ் மறுத்து விட்டார்.இதையடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. எனவே ஆத்திரமடைந்த 5 பேரும் பீர் பாட்டிலால் அருண்பிரகாஷை சரமாரியாக தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து மதுபான கூடம் அடித்து நொறுக்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக அருண் பிரகாஷ் எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிலர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து எல்லிஸ் நகர் டாஸ்மாக் மதுபான கூடத்தை சூறையாடியது தெரிய வந்தது.இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த கணேசன், கார்த்திக், அசாருதீன், விக்னேஷ் சுனில் பிரபாகர், சீனிவாசன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ். காலனி போலீசார் 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்