100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவமனையாக தென்காசி அரசு மருத்துவமனை; கண்காணிப்பாளர் உறுதி..

தென்காசி அரசு மருத்துவமனையை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவமனையாக கொண்டு வருவோம் என கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உறுதியளித்துள்ளார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு, இரண்டாவது கோவிஷீல்டு தடுப்பூசி 28 நாட்களில் இருந்து போடப்படுகிறது. வெளிநாடு செல்லும் பயணிகள் அசல் பாஸ்போர்ட்,விசா மற்றும் பயணச் சீட்டுகளை காண்பித்து, இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தென்காசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து சுகாதார பணியாளர்களும் முதல் மற்றும் இரண்டாவது தடவை தடுப்பூசிகள் முழுமையாக போட வேண்டுமென வலியுறுத்தினார். தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருந்த சில பணியாளர்களை அழைத்து, அவர்களுக்கு கொரொனா தடுப்பூசியின் நன்மையை எடுத்துக் கூறி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை இன்னும் ஒரு வாரத்தில் நூறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவமனையாக கொண்டு வருவோம் என உறுதியளித்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்